கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் கவுரவிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப்பின் பேச்சு பலரது கவனத்தைப் பெற்று வருகிறது. பெயர் குறிப்பிடாமல் அமெரிக்காவின் தற்போதைய, எதிர் வரும் அமெரிக்க அரசியல் சூழலைப் பற்றி அவர் பேசியது குறித்து பலர் பாராட்டி வருகின்றனர்.
74-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான செசில் பி டெமில் விருது நடிகை மெரில் ஸ்ட்ரீப்புக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்ற ஸ்ட்ரீப் தனது ஏற்புரையை தந்தார். இதில் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளை மறைமுகமாக விமர்சித்த அவர் தேசம் முன்னேறுவது பத்திரிகையாளர்கள் கையில் தான் இருக்கிறது என்ற பொருள்பட தனது உரையை முடித்தார்.
மெரில் ஸ்ட்ரீப் பேச்சின் முழு வடிவம் தமிழில்:
"அனைவருக்கும் நன்றி. எனது குரல் சரியில்லை. என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். அதிகமாக கத்தி புலம்பியதால் எனது குரல் கெட்டுவிட்டது.
ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அமைப்புக்கு நன்றி. ஹ்யூ லேரி சொன்னது போல, நீங்களும், இந்த அரங்கில் இருக்கில் இருக்கும் நாம் அனைவரும் தற்போதைய அமெரிக்க சமுதாயத்தில் அதிகமாக தூற்றப்படுகிற ஒரு பிரிவு. ஆனால் நாம் யார்? ஹாலிவுட் என்றால் என்ன? மற்ற இடங்களிலிருந்து வந்துள்ள சிலரைக் கொண்டை இடம் அது. அவ்வளவே.
நான் நியூ ஜெர்சியில் பிறந்து, வளர்ந்தேன். ஸாரா பால்சன் ப்ரூக்ளினில் வளர்ந்தவர். நடாலி போர்ட்மன் ஜெருசலத்தில் பிறந்தவர். ஏமி ஆடம்ஸ் இத்தாலியில் பிறந்தவர். அவர்களது பிறப்பு சான்றிதழ்கள் எங்கே? எதியோப்பியாவில் பிறந்த ரூத் நெக்கா விர்ஜினியாவை சேர்ந்தவராக நடித்ததற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கென்யாவில் பிறந்து லண்டனில் வளர்ந்த தேவ் படேல், டாஸ்மேனியாவில் வளர்ந்த இந்தியராக நடித்ததற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஹாலிவுட் முழுவதுமே வெளிநாட்டினரால் நிரம்பியுள்ளது. அவர்களை அனைவரையும் துரத்திவிட்டால் கால்பந்தும், தற்காப்புக் கலை சண்டையையும் பார்ப்பதை தவிற வேறு வழி உங்களுக்கு இருக்காது. அவை இரண்டும் கலைகளும் கிடையாது. நடிகரின் ஒரே வேலை, அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையில் நுழைந்து, அந்த நடிகரைப் போல, அந்த கதாபாத்திரத்தைப் போல இருப்பது எப்படி இருக்கும் என அவர்களை உணரவைப்பதே. இந்த வருடம் அப்படி உணர வைத்த அற்புத்மான படைப்புகள் பல இருக்கின்றன.
ஒரு நடிப்பு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது என் மனதை உலுக்கியது. அது நன்றாக இருந்தது என்பதால் அல்ல. அதில் நல்லது என எதுவும் இல்லை. ஆனால் அது சக்திவாய்ந்ததாக இருந்தது. அதன் வேலையை சரியாக செய்தது. அதற்கான ரசிகர்களை சிரிக்க வைத்தது. பல்லைக் காட்ட வைத்தது. ஏனென்றால் அது திரைப்படக்காட்சி அல்ல. நிஜத்தில் நடந்தது.
நமது தேசத்தின், அதிகம் மதிக்கப்படும் நாற்காலியில் உட்கார ஒருவர் அழைக்கப்பட்டபோது, அவர் மாற்றுத்திறனாளி பத்திரிகையாளர் ஒருவரைப் போல நடித்துக் காட்டி பரிகாசம் செய்தார். அந்த பத்திரிகையாளரை விட அதிக அதிகாரத்தை உடையவர். அவரை யாரும் எதிர்த்துப் போராட முடியாது. அது என் மனதை நொறுக்கியது. அதை இன்னும் எனது மனதிலிருந்து எடுக்க முடியவில்லை.
இப்படி இழிவுபடுத்தும் செயலை ஒருவர் பொது தளத்தில் செய்யும்போது, அதுவும் அதிகாரமிக்க ஒருவர் செய்யும்போது அது அனைவரது வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். ஏனென்றால், இது ஒருவகையில் மற்றவர்களும் அப்படி நடக்க அனுமதி தருகிறது. அவமரியாதை, அவமரியாதைக்கு வழிவகுக்கும். வன்முறை வன்முறையை விதைக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தை பயன்படுத்தி மற்றவர்களை கொடுமைப்படுத்தும்போது நம் அனைவருக்குமே அது இழப்புதான்.
இந்த சிந்தனை என்னை பத்திரிகைகளைப் பற்றி நினைக்கத் தூண்டுகிறது. உயர்ந்த பத்திரிகைதுறை சம்பந்தப்பட்டவர்களை ஒவ்வொரு சீற்றத்துக்கும் பதிலளிக்க வைக்க வேண்டும், அவர்களது பொறுப்பை உணர்த்த வேண்டும். அதனால் தன் நமது நிறுவனர்கள் பத்திரிகைத் துறையையும் அதன் சுதந்திரங்களையும் நமது அரசியலமைப்போடு சேர்த்து புனிதமான இடத்தில் வைத்துள்ளனர். இதனால், பிரபலமான ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ்ஸை சேர்ந்தவர்களையும், நம் துறையில் இருக்கும் அனைவரையும் என்னுடம் சேர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பத்திரிகையாளர்களைக் காக்க நாம் இந்த குழுவுக்கு ஆதரவு தர வேண்டும். ஏனென்றால் நாம் முன்னோக்கிச் செல்ல அவர்களது உதவி தேவை. உண்மையைக் காக்க அவர்களுக்கு நமது உதவி தேவை.
டாமி லீ ஜோன்ஸ் ஒருமுறை என்னிடம் சொல்லியது போல, நடிகராக இருப்பது ஒரு கவுரவம். அதை நாம் ஒருவருக்கொருவர் நினைவூட்டிக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் நிலையை புரிந்து கொள்ளும் பொறுப்பை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். ஹாலிவுட் இன்று கவுரவித்த அனைத்து கலைஞர்களைப் பற்றியும் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
மறைந்த எனது தோழில் கேரி ஃபிஷர் ஒருமுறை என்னிடம் சொன்னது போல, உனது உடைந்த மனதை எடுத்துக் கொள். அதை கலையாக மாற்று.
நன்றி"
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago