Joker: Folie À Deux விமர்சனம்: தேவையின்றி உடைக்கப்பட்ட ‘கிளாசிக்’ ஃபர்னிச்சர்!

By டெக்ஸ்டர்

2019-ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ஜோக்கர்’. டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற வில்லன் கதாபாத்திரமான ஜோக்கரை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் இரண்டு ஆஸ்கர்களை வென்றது. இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது என்ற அறிவிப்பே ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆர்வத்தை தூண்டியிருந்தது.

படத்தின் தொடக்கத்தில் ஜோக்கர் (எ) ஆர்தர் ஃப்ளெக் (வாக்கின் ஃபீனிக்ஸ்) குறித்த ஒரு கார்ட்டூன் காட்டப்படுகிறது. ஒப்பனை அறையில் ஆர்தரின் நிழல் அவரை தாக்கி விட்டு அவருடைய உடைகளை எடுத்துப் போட்டுக் கொண்டு மேடைக்கு செல்கிறது. அங்கிருந்து தப்பிக்கும் ஆர்தர் மீண்டும் தன்னுடைய நிழலிடமிருந்து தன்னுடைய உடைகளை மீட்கிறார். ஆனால், தனது நிழலின் செய்கைகளுக்காக போலீஸ் அவரை பிடித்துக் கொள்வதாக அந்த கார்ட்டூனில் காட்டப்படுகிறது. லைவ் ஆக்‌ஷனில் முந்தைய பாகத்தில் ஜோக்கர் (எ) ஆர்தர் ஃப்ளெக் செய்த கொலைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு கோதம் நகரத்தின் கொடூர வில்லன்கள் அடைக்கப்படும் அர்காம் அசைலம் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய செய்கைகளுக்கு காரணம் அவரல்ல, அவருடைய மற்றொரு பர்சனாலிட்டிதான் என்று ஆர்தரின் வழக்கறிஞர் கருதுகிறார்.

வெளியே கோதம் நகரில் ஆர்தரை ஹீரோவாக கொண்டாடும் ஒரு கூட்டமும், கொடூர வில்லனாக பார்க்கும் ஒரு கூட்டமும் உருவாகி இருக்கிறது. சிறையில் மற்றொரு சக கைதியான ஹார்லீன் குயின்ஸல் / ஹார்லி குயின் (லேடி காகா) ஆர்தர் சந்திக்கிறார். கண்டதுமே இருவருக்கும் இடையே ஓர் ஈர்ப்பு உருவாகி விடுகிறது. ஒருகட்டத்தில் ஹார்லி சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். எனினும் ஆர்தரின் விசாரணை நாளின்போது நீதிமன்றம் வருவதாக அவரிடம் உறுதியளிக்கிறார். விசாரணை ஆர்தருக்கு சாதகமாக சென்றதா, அவர் விடுதலை செய்யப்பட்டாரா என்பதே ‘ஜோக்கர் 2’ படத்தின் கதை.

‘ஜோக்கர்’ முதல் பாகத்தை பொறுத்தவரை சந்தேகமே இல்லாமல் அது ஒரு கிளாசிக். கிறிஸ்டோபர் நோலனின் ‘தி டார்க் நைட்’ படத்தில் ஹீத் லெட்ஜர் ஏற்று நடித்த ஜோக்கர் கதாபாத்திரத்துக்கு பிறகு ரசிகர்களால் அதிகம் கொண்டாப்பட்ட ஒரு ஜோக்கர் கேரக்டர். ஜோக்கரின் வில்லத்தனத்தை மட்டும் அலசாமல் உளவியல் ரீதியாக அந்த கதாபாத்திரத்தை அணுகியிருப்பார் இயக்குநர் டாட் பிலிப்ஸ். முந்தைய படங்களில், ஏன் காமிக்ஸ்களிலேயே கூட இல்லாத அளவுக்கு ஜோக்கரின் பண்புகள் அதில் நுணுக்கமாக பேசப்பட்டிருக்கும். அந்தக் கதாபாத்திரம்தான் வாக்கின் ஃபீனிக்ஸுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தது.

ஆனால், அதே டாட் பிலிப்ஸ்க்கு என்ன கோபமோ, இந்தப் படத்தில் தான் செதுக்கிய அந்தக் கதாபாத்திரத்தையே தன் கையாலேயே சிதைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படத்தை எந்தவகையிலும் ‘ஜோக்கர்’ முதல் பாகத்துடனும் ஒப்பிடவே முடியாது. முதல் படத்தின் வெற்றிக்கு காரணமாமே ஜோக்கரின் ‘டார்க்’ பக்கங்களை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி செய்த நேர்த்தியான திரைக்கதைதான். படத்தின் இறுதியில் ஒரு மாபெரும் கூட்டத்தை தன் வசப்படுத்திவிட்டு ரத்தம் தோய்ந்த உதடுகளுடன் ஜோக்கர் சிரிப்பை வெளிப்படுத்தும்போது படம் முடிந்திருக்கும். இன்னொருபுறம் சிறுவயது பேட்மேனின் பெற்றோர் கொல்லப்பட்டு கிடப்பார்கள். இப்படி ஒரு அட்டகாசமான க்ளைமாக்ஸுடன் முடித்து விட்டு, இந்தப் படத்தில் கொலைகளை செய்தது ஆர்தரே இல்லை, அவருக்குள் இருக்கும் ஜோக்கர் என்கிற பர்சனாலிட்டிதான் என்ற கதைக்கருவே ‘ஜோக்கர்’ ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிருப்தி.

அடுத்தது இந்தப் படத்தை மியூசிக்கல் படமாக எடுத்தது மற்றொரு மிகப் பெரிய பிரச்சினை. ஆரம்பத்திலேயே இது ஒரு மியூசிக்கல் த்ரில்லர் படம்தான் என்று சொல்லிவிட்டாலும் கூட படத்தின் பெரும்பாலான இடங்களில் வரும் பாடல்கள் ஒட்டவே இல்லை. அதேபோல த்ரில்லிங் அம்சங்களும் இல்லை. பேட்மேனையை கதறவிடும் டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற ஒரு வில்லனின் கதையை மியூசிக்கல் காதல் கதையாக பார்ப்பதே ஒரு தண்டனைதான்.

டிசி காமிக்ஸில் ஜோக்கர் - ஹார்லி குயின் ஜோடி என்பது மிகவும் பிரசித்தம். அதுவும் சரியாக இந்த படத்தில் கையாளப்படவில்லை. இதுவரை வந்த டிசி படங்களில் துள்ளலான, துருதுருப்பான ஹார்லி குயினாக மார்க்ரெட் ராப்பியை பார்த்த ரசிகர்களை லேடி காகாவின் கதாபாத்திர வடிவமைப்பு எந்தவிதத்தில் ஈர்க்கவில்லை. குறை சொல்லும் அளவுக்கு அவருடைய நடிப்பு இல்லையென்றாலும் ஹார்லி குயினாக அவர் சரியான சாய்ஸ் இல்லையென்றே தோன்றுகிறது. இயல்பிலேயே பாடகி என்பதால் பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். வழக்கம்போல வாக்கின் ஃபீனிக்ஸ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முந்தைய படத்தில் கொடுத்த நடிப்புக்கு எந்தவகையிலும் குறையாத ஸ்க்ரீன் பிரசன்ஸ். சோகம், விரக்தி, கோபம் என ஒவ்வொரு உணர்விலும் வெரைட்டி காட்டி அசத்துகிறார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தரமான செய்கை.

படத்தின் பிரச்சினையே தொய்வான எழுத்துதான். தொழில்நுட்ப அம்சங்கள், மேக்கிங், நடிப்பு என எந்தவகையில் குறையே சொல்லமுடியாத படம் திரைக்கதையாக பல இடங்களில் பொறுமையை சோதித்து கொட்டாவி வரவைக்கிறது. முந்தைய படத்தில் இருந்த ஓர் ஆர்ப்பரிப்பான தருணம் கூட இதில் இல்லையென்பதுதான் சோகம். ஒரே பாகமாக முடிந்திருக்க வேண்டிய கதையை வலுக்கட்டாயமாக 2-ஆம் பாகமாக உருவாக்கி, அதை வைத்து கல்லா கட்ட நினைத்த வார்னர் பிரதர்ஸ்க்கு இது ஒரு பாடமாக இருக்கலாம். காமிக்ஸ் ஆகவும், திரைப்படமாகவும் இதுவரை ஒரு கிளாசிக் ஆக போற்றப்பட்டு வந்த ஒரு கதாபாத்திரம், ‘மியூசிக்கல்’ என்ற பெயரில் தேவையின்றி சிதைக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

மேலும்