Past Lives: கடந்த கால நினைவுகளை கிளறும் கொரியன் ‘96’ | ஆஸ்கர் திரை அலசல்

By சல்மான்

ஆஸ்கர் 2024 விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படம் ‘பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives). செலின் சாங் என்ற பெண் படைப்பாளி இயக்கியுள்ள இப்படம், இந்த ஆண்டுக்கான கோல்டன் க்ளோப் விருதுகளிலும் ஐந்து பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. கால ஓட்டத்தில் தொலைந்து போன நினைவுகளை இப்படம் மீட்டுக் கொண்டு வருகிறது.

தென் கொரியாவின் சியோல் நகரில் வசிக்கிறார்கள் பால்ய வயது நண்பர்களான Na Young, Hae Sung. இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு நட்பை தாண்டிய ஈர்ப்பு உண்டு. குடும்பத்துடன் கனடாவுக்கு குடிபெயரும் Na Young, 12 ஆண்டுகளுக்குப் பிறகு சியோலில் இருக்கும் Hae Sung-ஐ ஃபேஸ்புக்கில் கண்டுபிடிக்கிறார். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் Na Young தனது பெயரை நோரா என்று மாற்றி வைத்துள்ளார்.

வீடியோ காலின் மூலம் தங்கள் பழைய காதலை புதுப்பிக்கும் இருவரும் 12 ஆண்டுகளாக பேசாமல் விட்ட அனைத்தையும் பேசித் தீர்க்கின்றனர். ஒருகட்டத்தில் இந்த தொலைதூர உறவுக்கு ஒரு தற்காலிக இடைவேளை வேண்டும் என்று Hae Sung-இடம் கேட்கிறார் நோரா. ஆனால் இந்த இடைவேளை அடுத்த 12 ஆண்டுகளாக நீண்டுவிடுகிறார். இப்போது நோராவுக்கு ஆர்தர் என்ற அமெரிக்கருடன் திருமணம் ஆகியிருக்கிறது. விடுமுறையை கொண்டாட நியூயார்க் வரும் Hae Sung அங்கு நோராவை சந்திக்கிறார். இதன் பிறகு இருவருக்குள்ளும் நடக்கும் உரையாடல்களும், சில சம்பவங்களும்தான் ‘பாஸ்ட் லைவ்ஸ்’ படத்தின் திரைக்கதை.

‘பாஸ்ட் லைவ்ஸ்’ படத்தின் கதை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலகட்டங்களுக்கு விரிகிறது. இப்படம் இழந்த காதலை, கடந்த காலத்தில் நாம் தொலைத்த நினைவுகளை இதயத்தை கீறி வெளியே கொண்டு வருகிறது. இயக்குநர் செலின் சாங்-ன் முதல் படமான இதில், பல காட்சிகளில் கேமரா ஒரே இடத்தில் தான் வைக்கப்பட்டிருக்கிறது.

பெரும்பாலான ஷாட்களில் ஒருவித அசைவற்ற தன்மை இருந்தாலும், ஒவ்வொரு பிரேமும் பார்ப்பவர்களின் மனதை அசைத்துப் பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக நாம் கிளைமாக்ஸை அடையும்போது அடைத்து வைத்த உணர்வுகள் அனைத்தும் பொங்கி பிரவாகம் எடுத்து மேலே வந்து விடுவதே இயக்குநரின் வெற்றி.

இந்தப் படத்தை பல வழிகளில் தமிழில் த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படத்துடன் ஒப்பிடலாம். இழந்த காதல், பழைய காதலனை/காதலியை சந்திக்க கடல் கடந்து வருவது, இருவருக்குமான வெவ்வேறு பாதைகள் என பல இடங்களில் இப்படம் ‘96’, ‘த்ரீ ஆஃப் அஸ்’ ஆகிய படங்களை நினைவூட்டுகிறது. ஆனால் அப்படங்களில் இருந்ததை காட்டிலும் உணர்வுபூர்வமான காட்சிகள் இதில் படம் முழுவதும் ஏராளம்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சிறுவயது நண்பனை முதன்முதலில் நேரில் காணும் நோராவிடம், அதுவரை இருந்த 30+ வயதுக்கே உரிய ஒருவித முதிர்ச்சி விலகி குழந்தைத்தன்மை எட்டிப் பார்ப்பது, அன்றுவரை கணவனான இருந்த ஆர்தர், நோரா - Hae Sung உரையாடலின் போது அந்நியனாகி விடுவது போன்ற காட்சிகள் எல்லாம் ஒரு கவிதையைப் போல செதுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு காட்சியில் வீடியோ காலில் Hae Sung-இடம் பேசும்போது, ‘உன்னிடமும், என் அம்மாவிடமும் தான் கொரிய மொழியில் பேசுகிறேன்’ என்று நோரா சொல்வாள். அதே போல நியூயார்க் வரும் Hae Sung குறித்து தன் கணவனிடம் சொல்லும்போது அவனிடம் இருக்கும் ‘கொரியத்தன்மை’ குறித்து நோரா பேசும் வசனங்கள், சொந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டில் வசிப்பவர்களுடைய மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துபவை.

படம் முழுக்க வசனங்களும், அசைவற்ற ஷாட்களும் நிறைந்திருந்தாலும் ஒரு இடத்தில் கூட ‘போர்’ அடிக்காமல் எழுதப்பட்டிருப்பதே இப்படத்தின் பலம். இத்தனைக்கும் படத்தின் மொத்தமே மூன்று பிரதான கதாபாத்திரங்கள்தான். கதாபாத்திரங்களுக்கு இடையிலான வசனங்கள் அனைத்தும் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது சிறப்பு.

படத்தின் ஒளிப்பதிவு, லைட்டிங், படம் நெடுக வரும் மெல்லிய பியானோ இசை என அனைத்தும் கிளாஸ் ரகம். படத்தில் நடித்துள்ள கிரேட்டா லீ, டியோ யூ, ஜான் மகாரோ மூவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் இறுதியில் ஊருக்கு செல்லும் Hae Sung-ஐ வழியனுப்பி வைக்க நோரா செல்லும்போது இருவருக்கும் இடையே நிலவும் மவுனம், அந்த மவுனத்தை கலைக்க வந்து நிற்கும், Hae Sung சென்றதும் நோரா அமைதியாக வீட்டை நோக்கி நடந்து செல்வது இந்த அடுத்தடுத்த காட்சிகளில் இருக்கும் கலைத்தன்மையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இறுதியாக தேக்கி வைத்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பும் இடத்தில் தேம்பி அழுவது நோரா மட்டுமில்லை. நாமும் தான்.

முந்தைய கட்டுரை > Poor Things: கற்பிதங்களை எள்ளி நகையாடும் பின்நவீனத்துவ படைப்பு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

11 mins ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்