Poor Things: கற்பிதங்களை எள்ளி நகையாடும் பின்நவீனத்துவ படைப்பு | ஆஸ்கர் திரை அலசல்

By சல்மான்

1992-ஆம் ஆண்டு அலாஸ்டாய்ர் கிரே எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘புவர் திங்ஸ்’. டோனி மெக்நமாரா எழுதி, யோர்கோஸ் லான்த்திமோஸ் இயக்கியுள்ள இப்படம் ஆஸ்கரில் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிறந்த படம், சிறந்த நடிகைக்கான இரண்டு கோல்டன் குளோப் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளது.

குடும்பப் பிரச்சினையால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் ஒரு பெண் (எம்மா ஸ்டோன்), டாக்டர்.காட்வின் பாக்ஸ்டர் (வில்லென் டோஃபோ) என்ற விஞ்ஞானி ஒருவரால் மீட்கப்பட்டு மீண்டும் உயிர்கொடுக்கப்படுகிறார். அவருக்கு பெல்லா பாக்ஸடர் என்று பெயரையும் சூட்டுகிறார் அந்த விஞ்ஞானி. உடல் வளர்ந்தாலும் உள்ளமும் குழந்தைத்தன்மையுடனே இருக்கும் பெல்லா, தன்னைப் பற்றியும் தன்னை சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றியும் ஒவ்வொரு புதிய விஷயங்களாக கற்றுக் கொள்ளத் தொடங்குகிறார்.

காட்வின் பாக்ஸ்டரின் வழக்கறிஞராக வரும் டன்கன் (மார்க் ரஃபலோ) பெல்லாவின் மீது மையல் கொள்கிறார். தான் இருக்குமிடத்தில் இருந்து வெளியேறி உலகை தெரிந்து கொள்ள விரும்பும் பெல்லா, டன்கன் உடன் சென்றுவிடுகிறார். பெல்லாவின் இந்த பயணத்தில் நடக்கும் விஷயங்களால் அவருள் ஏற்படும் மாற்றம் என்ன? இறுதியில் என்னவானது என்பதே ‘புவர் திங்ஸ்’ படத்தின் கதை.

ஹாலிவுட் சினிமா விரும்பிகள் ‘ஃப்ரான்கன்ஸ்டெய்ன்’ (Frankenstein) என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கலாம். விக்டர் ஃப்ரான்கன்ஸ்டெய்ன் என்ற விஞ்ஞானி, மனித சடலங்களிலிருந்து எடுக்கப்பட்ட உடற்பாகங்களை ஒன்றாக்கி ஒரு உயிரினத்தை உருவாக்குவார். பெரிய தலை, நீண்ட கைகளைக் கொண்ட அந்த உயிரினம் ‘ஃப்ரான்கன்ஸ்டெய்ன்’ஸ் மான்ஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த கதாபாத்திரம் பல ஹாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஃப்ரான்கன்ஸ்டெய்ன் போன்ற ஒரு விஞ்ஞானி (அவரது உருவமே கூட ‘ஃப்ரான்கன்ஸ்டெய்ன்’ஸ் மான்ஸ்டர்’ போலத்தான் இருக்கிறது) உருவாக்கும் அந்த உயிரினம் ஒரு பெண்ணாக இருந்தால், அது இந்த சமூகத்தை நோக்கி சில கேள்விகளை முன்வைத்தால், அதுதான் ‘புவர் திங்ஸ்’.

விஞ்ஞானியால் உயிர்கொடுக்கப்பட்ட பெல்லா, நடப்பது, சாப்பிடுவது என ஒரு குழந்தைக்கே உரிய குணநலன்களோடு ஒவ்வொரு விஷயங்களாக கற்றுக் கொள்வது வரை ஒரு பாதையில் செல்லும் படம், பெல்லா முதன்முறையாக தன்னுடைய உடல் குறித்தும், பாலுறவு குறித்தும் தெரிந்து கொள்ளும்போது வேறொரு பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.

இந்த பயணத்தில் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் போலியான கற்பிதங்களை நோக்கி ஆழமான கேள்விகளை முன்வைத்துக் கொண்டே செல்கிறது பெல்லா கதாபாத்திரம். சமூக அடுக்குகள், ஆண் - பெண் உறவு, பெண்கள் குறித்த சமூகத்தின் பார்வை என ஏராளமான விஷயங்களை பெல்லா ஒரு குழந்தையின் இடத்தில் எள்ளி நகையாடுகிறாள்.

1990ஆம் ஆண்டு டிம் பர்ட்டான் இயக்கி வெளிவந்த ‘எட்வர்ட் சிஸ்ஸர்ஹேண்ட்ஸ்’ கதைக்களமும் இதுவேதான். ஆனால் அதில் ஜானி டெப் கதாபாத்திரம் கேட்கத் தவறிய ஏராளமான கேள்விகளை பெல்லா கதாபாத்திரம் சமூகத்தை நோக்கி படம் நெடுக கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதைப் போலவே இந்தப் படமும் பின்நவீனத்துவ பாணியில் உருவாக்கப்பட்டது. படத்தின் காலகட்டம் இன்னதுதான் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. கதாபாத்திரங்களின் ஆடைகளும், வசன உச்சரிப்பும் விக்டோரியன் காலகட்டம் போல இருந்தாலும், படத்தில் வரும் நவீன கண்டுபிடிப்புகள் எதிர்காலத்துக்கே சவால் விடுவது போல அமைக்கப்பட்டுள்ளன.

படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை ஒவ்வொரு கட்டத்திலும் எம்மா ஸ்டோன் காட்டும் குழந்தைத்தனமும், முதிர்ச்சியும் அபாரம். ஆரம்ப காட்சிகளில் ஓவர் ஆக்டிங் போல தோன்றினாலும் படிப்படியாக அவர் காட்டும் வளர்ச்சியில் பார்ப்பவர்களை அசரவைத்து விடுகிறார்.

எம்மா ஸ்டோனுக்கு அடுத்தபடியாக பாராட்டப்படவேண்டிய நடிப்பு மார்வெல் ரசிகர்களுக்கு ‘ஹல்க்’ ஆக பரிச்சயமான மார்க் ரஃபலோ உடையது. பெல்லாவிடன் காதலில் வீழ்வது, ஒருகட்டத்தில் பெல்லாவின் தொல்லைகளை தாங்கமுடியாமல் கையறுநிலையில் கதறுவது என ரஃபலோ காட்டும் ரியாக்‌ஷன்கள் அபாரம். விஞ்ஞானியாக வில்லெம் டோஃபோ. எமோஷனல் காட்சிகளில் அந்த கனமான மேக்கப்பையும் மீறி அவரது முக உணர்வுகள் வெளிப்படுவதே அவரது சிறந்த நடிப்பின் சாட்சி.

படத்தின் ஒளிப்பதிவு தொடங்கி இசை, ஆடை அலங்காரம், ஒப்பனை, விஎஃப்எக்ஸ் என எல்லா துறையினரும் படத்தின் ஓட்டத்துக்காக உழைத்துள்ளது திரையில் தெரிகிறது. குறிப்பாக ஒளிப்பதிவு, கலை அலங்காரம் ஆகியவை படம் முழுக்கவே ஒருவித மிகைத்தன்மையுடன் இருப்பது, இந்த கதைக்களத்துக்கு பெரிதும் உதவுகிறது. தொடக்கம் முதல் இறுதிவரை ஒவ்வொரு பிரேமும் படுதுல்லியம்.

பொதுவாக பெண்களைப் பற்றி ஆண்களால் எடுக்கப்படும் திரைப்படங்கள் முழுக்க முழுக்க அவர்களின் பார்வையிலோ அல்லது மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளை சுமந்தபடியே வருவது வழக்கம். ஆனால் டோனி மெக்நமாரா என்ற ஆணால் எழுதப்பட்டு யோர்காஸ் லான்த்திமோஸ் என்ற ஆணால் எடுக்கப்பட்ட இந்த ’புவர் திங்ஸ்’ ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து சமூகத்தின் போலி கட்டமைப்புகளை ஒருமுறை அசைத்து பார்க்கிறது.

முந்தைய கட்டுரை > Anatomy of a Fall: ஒரு மரணமும் சில பின் விளைவுகளும் | ஆஸ்கர் திரை அலசல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE