Anatomy of a Fall: ஒரு மரணமும் சில பின் விளைவுகளும் | ஆஸ்கர் திரை அலசல்

By சல்மான்

பனி சூழ்ந்த ஆள் அரவமற்ற ஒரு பகுதியில் இருக்கும் ஒரு தனி மரவீடு. அங்கே வாழும் ஒரு கணவன் - மனைவி. இதில் கணவன் இயற்கைக்கு மாறான முறையில் கொடூரமான மரணம் அடைகிறான். வீட்டில் இருந்த ஒரே ஒரு மற்றொரு நபரான மனைவி இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வாள். இதுதான் ஜஸ்டின் ட்ரியட் இயக்கியுள்ள ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ (Anatomy of a Fall) படத்தின் மையக்கரு. கேன்ஸ் 2023 விழாவில் மிக உயரிய ‘தங்கப் பனை’ விருதை வென்று, ஆஸ்கரில் சிறந்த படம், சிறந்த நடிகை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் நாமினேட் ஆகியுள்ள படம்.

ஜெர்மனை தாய்மொழியாகக் கொண்ட பிரபல எழுத்தாளர் சாண்ட்ரா (சாண்ட்ரா ஹுல்லர்). லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அவர், தன் கணவனுக்காக பிரான்ஸில் குடியேறியிருக்கிறார். சிறுவயதில் ஏற்பட்ட ஒரு விபத்தால் சாண்ட்ராவின் மகன் டேனியலுக்கு கண்பார்வை பறிபோகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தில் இருக்கும் ஒரு தருணத்தில், சாண்ட்ராவை நேர்காணல் செய்ய இளம்பெண் ஒருவர் அவரது வீட்டுக்கு வருகிறார். அந்த நேர்காணலை தொந்தரவு செய்யும் நோக்கில், 50 Cent-ன் P.I.M.P பாடலின் இன்ஸ்ட்ருமென்ட்டல் வெர்ஷனை பயங்கர சத்தத்துடன் மாடியில் இருந்தபடி ஒலிக்க விடுகிறார் கணவர் சாமுவேல்.

இதனால் நேர்காணல் பாதியில் தடைபடுகிறது. நேர்காணல் எடுக்க வந்த அந்த இளம்பெண் சென்ற சிறிது நேரத்தில் மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்து போகிறார் சாமுவேல். மகன் டேனியல் வீட்டில் இல்லாத நிலையில், சாமுவேலின் மரணத்துக்கு சாண்ட்ராதான் காரணம் என்ற முடிவுக்கு வருகிறது போலீஸ். இது தொடர்பாக நடக்கும் வழக்கில் சாண்ட்ரா குறித்த பின்னணியும், அவருக்கும் சாமுவேலுக்கும் இடையிலான சிக்கல்கள் குறித்தும் நமக்கு காட்டப்படுகின்றன அல்லது வசனங்களாக சொல்லப்படுகின்றன. இந்த வழக்கிலிருந்து சாண்ட்ரா தப்பித்தாரா? சாமுவேலின் மரணம் இயற்கையா அல்லது கொலையா? - இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘அனாடமி அஃப் எ ஃபால்’.

மற்ற வகை படங்களை விட கோர்ட்ரூம் டிராமாக்களை பொறுத்தவரை, அதன் திரைக்கதை மிக வலுவாக இருப்பது அவசியம். அது எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி. காரணம், இந்த வகை படங்களில் பெரும்பாலான காட்சிகளை வசனங்களால் நகர்த்துவதை தவிர இயக்குநருக்கு வேறு வழி இருக்காது. அதற்கு பார்வையாளர்களை அங்கும் இங்கும் நெளிய விடாத ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அவசியம். சற்று பிசகினால் கூட பார்வையாளர்கள் கொட்டாவி விட தொடங்கி விடும் அபாயம் இதில் உண்டு.

அந்த வகையில், ஒரு நிதானமான, நேர்த்தியான திரைக்கதையுடன், சுவாரஸ்யம் குன்றாத வகையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் ஜஸ்டின் ட்ரியட். ஒரு நேர்காணல் காட்சியிலிருந்து தொடங்கும் படம், அடுத்து எங்கும் நிற்காமல் அடுத்தடுத்த காட்சிகளால் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

கணவன் - மனைவிக்கு இடையிலான உறவுச் சிக்கல்களை பேசுவதற்கு எல்லாம் காட்சிகளை இயக்குநர் வீணடிக்கவில்லை. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆடியோ, வீடியோ, சாட்சி கூறும் நபர்கள் ஆகியவற்றின் வாயிலாகவே நமக்கு மிக எளிமையாக அதே சமயம் அழுத்தமாக உணர்த்தப்படுகிறது.

படத்தின் நீதிமன்ற காட்சிகளைத் தாண்டி, சாண்ட்ரா - சாமுவேல் இடையிலான உறவு, மகன் டேனியல் - சாண்ட்ரா இடையிலான உறவு ஆகியவையும் மிக ஆழமாக அலசப்பட்டுள்ளது. கொலையை சாண்ட்ரா செய்தாரா இல்லையா என்ற கேள்வியின் பின்னணியில் பெண் சுதந்திரம், தாய்மை, இல்லறம் போன்ற பல விஷயங்களை ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ பேசுகிறது.

டேனியல், சாமுவேல், சாண்ட்ராவின் வழக்கறிஞர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது சிறப்பு. இன்னும் சொல்லப் போனால் சிறுவன் டேனியலின் செல்லப்பிராணியான ‘ஸ்கூப்’ என்ற நாயின் கதாபாத்திரம் கூட மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

படத்தின் நாயகி சாண்ட்ரா ஹுல்லர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுப் பரிந்துரையில் இருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் வரும் நேர்காணல் காட்சியில் அவரிடம் இருக்கும் அந்த மகிழ்ச்சியும், துள்ளலும், கணவனின் மரணத்துக்குப் பின்னால் காணாமல் போய் ஒருவித இறுக்கமும், துயரமும் படம் முழுக்க அவருடன் பயணிக்கிறது. கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் பேசும் அனைத்துக் காட்சிகளிலும் தன்னுடைய சிறந்த நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

படத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக வரும் ஆண்டோய்ன் ரெய்னார்ட்ஸ் கேட்கும் கேள்விகள் ஒருகட்டத்தில் பார்க்கும் நமக்கே எரிச்சலை ஏற்படுத்தி விடுகின்றன. ஒரு சில காட்சிகளே வந்தாலும் சாமுவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாமுவேல் தெஸிஸ்-ன் இருப்பு படம் முழுக்க இருந்து கொண்டே இருக்கிறது.

இயக்குநர் நினைத்திருந்தால் இதனை ஒரு த்ரில்லர் படமாக கொடுத்திருப்பதற்காக அத்தனை சாத்தியக் கூறுகளும் இப்படத்தில் உண்டு. ஆனால், அந்த பாதைக்கு போகாமல் மிக இயல்பான, ஆழமான பாத்திரப் படைப்புகளும் கொண்ட ஒரு கோர்ட்ரூம் டிராமாவை தந்துள்ளார். கண்டிப்பா இப்படம் த்ரில்லர் ரசிகர்களுக்கானது அல்ல. நிதானமான, அதே நேரம் அழுத்தமான ஒரு படத்தை பார்க்க விரும்புவர்களை ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ நிச்சயம் ஏமாற்றாது.

முந்தைய கட்டுரை > The Holdovers: மனித மனங்களின் ஆழத்தை நுணுக்கமாக அணுகும் படைப்பு | ஆஸ்கர் திரை அலசல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்