டைட்டன் நீர்மூழ்கி குறித்த திரைப்படமா?- ஜேம்ஸ் கேமரூன் திட்டவட்டமாக மறுப்பு

By செய்திப்பிரிவு

நியூயார்க்: டைட்டன் நீர்மூழ்கி குறித்த திரைப்படம் எதுவும் இயக்கப்போவதில்லை என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடக்கு அட்லான்டிக் பெருங்கடலின் ஆழத்தில், டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காண்பதற்காக டைட்டன் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், 5 நபர்களைக் கொண்ட குழுவை ஏற்றிச் சென்றது. புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தேடுதல் பணியின் இறுதியில், டைட்டன் நீர்மூழ்கி பேரழுத்தத்தின் காரணமாக உடைந்ததில், அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும், அதனை ‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்க உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

தற்போது இந்த தகவலுக்கு ஜேம்ஸ் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், “பொதுவாக ஊடகங்களில் வரும் அவதூறான வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால் நான் இதற்கு பதிலளித்து ஆகவேண்டும். நான் ஓசன்கேட் தொடர்பான படம் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. எப்போதும் ஈடுபடவும் மாட்டேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE