தொடர் போராட்டம் எதிரொலி - 63 ஆண்டுகளுக்குப் பிறகு முடங்கிய ஹாலிவுட்

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்களின் தொடர் போராட்டத்தில் நடிகர்களும் இணைந்துள்ளதால் கடந்த 63 ஆண்டுளில் முதன்முறையாக ஹாலிவுட் முடங்கியுள்ளது.

ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பளப் பற்றாக்குறை, ஏஐ அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக ‘ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பு கடந்த மே மாத தொடக்கம் முதல் போராடி வருகிறது.

இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்து வருகின்றன. சினிமா மற்றும் தொலைகாட்சி தொடர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கதை எழுதுவதை தடுக்க வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் ஹாலிவுட் திரைப்பட மற்றும் தொலைகாட்சி தொடர் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

இந்த போராட்டத்துக்கு ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள் கூட்டமைப்பும் தற்போது ஆதரவு அளித்துள்ளது. நோலனின் ‘ஒப்பன்ஹெய்மெர்’ படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் வெளியீட்டு விழா லண்டனில் நேற்று (ஜூலை 13) நடைபெற்ற நிலையில், அப்படத்தின் நடிகர்களான சிலியன் மர்ஃபி, ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்டோர் விழாவைப் புறக்கணித்து இந்த போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனை கிறிஸ்டோபர் நோலன் விழா மேடையிலேயே அறிவித்தார்.

மேலும், முன்னணி நட்சத்திரங்களான மெரில் ஸ்ட்ரீப், ஜெனிஃபர் லாரன்ஸ், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக், ரம மலெக் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஹாலிவுட் துறை கடந்த 63 ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எழுத்தாளர்கள் போராட்டத்தில் நடிகர்களும் இணைந்துள்ளதால் திரைப்படம், வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றின் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE