Mission Impossible Dead Reckoning Part One Review: டாம் க்ரூஸ் சாகசங்களுடன் சிலிர்ப்பூட்டும் ஆக்‌ஷன் அனுபவம்

By சல்மான்

உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்த ‘மிஷன் இம்பாசிபிள்’ பட வரிசையின் ஏழாவது பாகமான ‘Mission Impossible Dead Reckoning Part One’ திரைப்படம் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு தீனி போட்டதா? - வாருங்கள் பார்ப்போம்.

வழக்கமாக ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் ஒரு மனிதனோ அல்லது ஒரு குழுவோ வில்லனாக செயல்படுவர். ஆனால், இந்தப் படத்தில் ‘Entity’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் ஒரு கணினிதான் பிரதான வில்லன். படத்தின் தொடக்கத்தில் இந்த கணினி ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை கட்டுப்படுத்தி வெடிக்கச் செய்கிறது. அந்தக் கணினியும், அதற்கான சாவியின் ஒரு பகுதியும் அந்தக் கப்பலுடன் ஆழ்கடலில் உள்ளன. அந்த சாவியின் இன்னொரு பகுதியை இருக்கும் இடத்தை அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்து, அதனை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வேலை நாயகன் ஈதன் ஹண்ட்-க்கும் (டாம் க்ரூஸ்) கொடுக்கப்படுகிறது. அந்த சாவியின் இரண்டு பகுதிகளையும் ஒன்று சேர்த்து அந்தக் கணினியை திறக்க வேண்டும்; திறந்தால் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாயகன் டாம் குரூஸும், அவரின் டீமும் இந்த மிஷனை முடித்தார்களா என்பதே ‘Mission Impossible Dead Reckoning Part One’ படத்தின் திரைக்கதை.

செயற்கை நுண்ணறிவு மெல்ல உலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், அதை பிரதான வில்லனாக வைத்தே நொடிக்கு நொடி நம்மை பரபரப்பின் உச்சத்துக்கு கொண்டு ஒரு தரமான ஆக்‌ஷன் படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குயரி. வழக்கமாக சாத்தியமே இல்லாத ஒரு பெரிய வேலையை கையில் எடுத்துக்கொண்டு, அதை சாத்தியமாக்கிக் காட்டி உலகைக் காப்பாற்றுவதுதான் ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களின் அடிநாதம். லாஜிக் மீறல்கள் எல்லாம் படம் முழுக்க இருந்தாலும், அதைப் பற்றி ஒரு நொடி கூட நம்மை சிந்திக்க விடாமல் கட்டிப் போடுவதே இப்படங்களின் வெற்றி. அந்த மேஜிக்கை இந்தப் படத்திலும் சிறப்பாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

வழக்கம்போல படத்தின் பெரும் பலம் டாம் குரூஸ் தான். 61 வயது என்ற சுவடு எங்கும் தெரியாமல், தோற்றத்திலும், சாகசங்களிலும் நம்மை வாய்பிளக்க வைக்கிறார். இந்த மனிதரால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய சாதனையை தானே முறியடிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார். படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்னால் வரும் பைக் சாகசம் அதற்கு ஓர் உதாரணம். முந்தைய ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் வரும் பென்ஸி (சைமன் பெக்), லூதர் (விங் ரேம்ஸ்), இல்சா (ரெபெக்கா ஃபெர்க்யூஸன்) ஆகியோர் இதிலும் உள்ளனர். பிக்பாக்கெட் அடிக்கும் நாயகியாக வரும் ஹேய்லி அட்வெல் சிறப்பான தேர்வு.

முதல் பாகத்தோடு தொடர்புப்படுத்தி திரைக்கதையை எழுதியிருப்பது சிறப்பு. 27 ஆண்டுகள் ஆகியும் ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களுக்கான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் குறையாமல் அப்படியே இருப்பது ஆச்சர்யம். ஒவ்வொரு மிஷன் இம்பாசிபிள் படத்திலும் வியக்க வைக்கும் ஒரு சாகசக் காட்சி இடம்பெற்றிருக்கும். இதில், அதுபோன்ற காட்சிகள் படம் முழுக்கவே வருகின்றன.

எல்லாவற்றுக்கும் உச்சமாக மலையிலிருந்து பைக்கில் டாம் குரூஸ் காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் ரயில் காட்சியும் இதுவரை ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் வந்த அத்தனை ஆக்‌ஷன் காட்சிகளையும் தூக்கி சாப்பிட்டுள்ளது. இதற்காக ஒரு கிராமத்தையே உருவாக்கி அந்தக் காட்சிகளை படமாக்கியுள்ளனர். அவற்றில் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநரின் உழைப்பு ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிலிர்க்க வைக்கிறது.

படத்தின் குறையென்று பார்த்தால், படத்தின் தொடக்கத்திலும், இரண்டாம் பாதியில் பல இடங்களிலும் வரும் நீண்ட வசனங்கள். கதையோட்டத்தின் வேகத்துக்கு தடைகளாக இவை வருகின்றன. படத்தின் ஆரம்பத்திலேயே Entity குறித்து பார்வையாளர்களுக்கு காட்சி வழியே கடத்திய பிறகும், எதற்காக அத்தனை நீளமான வசனங்கள் என்று தெரியவில்லை. வழக்கம்போல என்ன செய்தாலும் எதுவும் ஆகாத ஹீரோ, ரோம், வெனிஸ் போன்ற பரபரப்பான நகரங்களில் கூட போலீஸ் கண்ணில் மண்ணை தூவி சேஸிங்கில் ஈடுபடுவது என அப்பட்டமான லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவிடாமல் நம்மை ரசிக்க வைத்ததே திரைக்கதையின் வெற்றி.

இதுவரை வந்த ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களில், இதற்கு முந்தைய பாகமான ‘Fallout' தான் சுமாரான படம் என்று விமர்சிக்கப்படுவதுண்டு. தன் மீது வைக்கப்பட்ட அந்த விமர்சனத்தை இப்படத்தின் துடைத்தெறிந்துள்ளார் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குயரி. சாகச விரும்பிகள், ஆக்‌ஷன் ரசிகர்கள் நல்ல ஒலி,ஒளி அமைப்புடன் கூடிய பெரிய திரையில் ரசித்துக் கொண்டாடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்