17 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்த ‘தி கேரளா ஸ்டாரி’ 

By செய்திப்பிரிவு

பெரும் சர்ச்சைகளுக்கிடையே வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.

வட மாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12-ஆம் தேதி இப்படம் வெளியானது. தென்னிந்தியாவில் சோபிக்காத இப்படம் இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. அதன் எதிரொலியாக படம் வெளியாகி 17 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.203 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் கேரளாவில் உள்ள ‘புனே ஃபிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ ( Pune-based Film and Television Institute of India) திரையரங்கில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் எந்தவித முன் அறிவிப்புமின்றி திரையிடப்பட்டதாக மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கத்தில் படத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டை பொறுத்தவரை படம் பார்க்கச் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE