“அது படப்பிடிப்புத் தளம்... என்னை ட்ரோல் செய்தோருக்கு நன்றி” - வைரல் புகைப்பட காரணத்தை பகிர்ந்த அமிதாப் பச்சன்

By செய்திப்பிரிவு

மும்பை: சாலை விதிகளை மீறி பைக்கில் பயணித்ததாக நடிகர் அமிதா பச்சன் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது டிராபிக் ஜாம் ஆனதாகவும், சாலையில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றதாகவும் நேற்று தகவல் பரவியது. இந்தத் தகவலுக்கு அமிதாப் பச்சனின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் வலு சேர்த்திருந்தது. பைக் ஒன்றில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்வது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் அமிதாப் பச்சன், “ரைடுக்கு நன்றி நண்பா. நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வேகமாகவும், தீர்க்க முடியாத டிராபிக் சிக்கல்களை தவிர்த்தும், என்னை கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி” என பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி மும்பை போலீஸின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக தனது வலைப்பதிவில் விளக்கமளித்துள்ள அமிதாப் பச்சன், “கன்டென்ட் வறட்சியால் பைக் புகைப்படம் கன்டென்ட் ஆக்கப்பட்டது. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எப்படி ஒரு அந்நியருடன் உங்களால் பயணிக்க முடியும்? அதிகம் நேசிக்கப்படும் நபராக இருக்கும்போது ஹெல்மெட் இல்லாமல் எப்படி பயணிக்க முடியும்? உண்மை என்னவென்றால், அது மும்பையின் தெருவில் உள்ள ஒரு லோகேஷன் ஷூட்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மும்பையின் பல்லார்ட் எஸ்டேட்டில் படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகையால் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் என்பதாலும், ட்ராஃபிக் இல்லாமல் இருக்கும் என்பதாலும் அன்று படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றோம். அந்த பைக்கில் அமர்ந்திருந்த போது நான் அணிந்திருந்த உடை படப்பிடிப்புக்கான உடை. படப்பிடிப்பு தளமாக அங்கே 30 -40 மீட்டரில் படக்குழுவைச் சேர்ந்தவருடன் பைக்கில் பயணித்தேன். அதைத் தாண்டி வேறு எங்கேயும் செல்லவில்லை. ஆனால், நான் நேரத்தை மிச்சப்படுத்தவே பைக்கில் சென்றேன் என பரப்பப்ப்பட்டுவிட்டது” என்றார்.

மேலும், “அவர்கள் சொல்வதைப்போல அப்படி தாமதம் ஏற்பட்டால் ஹெல்மெட் அணிந்துகொண்டு சாலைவிதிகளை முறையாக பின்பற்றி அப்படி செய்வேன். நான் மட்டுமல்ல முன்னதாக, சரியான நேரத்தில் லோகேஷனிற்கு செல்ல அக்‌ஷய் குமார் இப்படி செய்திருப்பதை அறிந்தேன். அவர் தனது பாதுகாவலரின் பைக்கில் ஹெல்மேட் அணிந்து பயணித்திருந்தார். யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை” என்றார்.

இறுதியாக, “உங்கள் அக்கறைக்கும், அன்புக்கும், என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி. போக்குவரத்து விதிகளை மீறியதாக தவறான எண்ணத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். லவ் யூ” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE