16 மணி நேரத்தில் 6+ கோடி பார்வைகள்  - 'ஆதிபுருஷ்' ட்ரெய்லர் சாதனை

By செய்திப்பிரிவு

மும்பை: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இது பான் இந்தியா படமாக உருவாகியுள்ள காரணத்தால் இதன் ட்ரெய்லரை படக்குழு ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக வெளியிட்டது.

இந்த நிலையில் ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக இந்தியில் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளை இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது. தெலுங்கில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் தமிழில் 30 லட்சம், கன்னடத்தில் 20 லட்சம், மலையாளத்தில் 30 லட்சம் பார்வைகளையும் இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கு உள்ளான நிலையில், படத்தின் கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்த படக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெயலரில் கிராபிக்ஸ் தரம் முன்பை விட பலமடங்கு சிறப்பாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஆதிபுருஷ்’ படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE