கிராஃபிக்ஸில் முன்னேற்றம் - பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கடந்த ட்ரெய்லரைக் காட்டிலும் இந்த ட்ரெய்லரில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொடர்பான காட்சிகளில் முன்னேற்றம் தென்படுகிறது.

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கு உள்ளாகின. பல காட்சிகளை ஹாலிவுட்டில் வெளியான பல படங்களில் இருந்து காட்சிக்கு காட்சி அப்படியே நகலெடுத்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் ஆதாரங்களுடன் பதிவிட்டனர். இதனை கருத்தில் கொண்டு படத்தின் கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்த படக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது கிராபிக்ஸ் மெருகூட்டும் பணிகள் நிறைவடைந்துவிட்டதால் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் எப்படி?: கடந்த முறை வெளியான ட்ரெய்லரில் கிராஃபிக்ஸ் காட்சிகள் தனித்து தெரிந்தன. இந்த ட்ரெய்லரில் கிராஃபிக்ஸ் காட்சிகளில் முன்னேற்றம் தென்படுகிறது. குறிப்பாக பிரபாஸ், அனுமானுடன் நடந்து வரும் காட்சிகள் யாவும் கிராஃபிக்ஸில் மேம்பட்டுள்ளன. மற்றபடி படம் ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட படமாக உருவாகியுள்ளது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. பாலிவுட்டில் ஏற்பட்டுள்ள கதை பஞ்சம் இயக்குநர்களை மீண்டும் ராமாயண கதைகளை தேடி ஓட வைத்துள்ளது. மற்றபடி ட்ரெய்லரில் சுவாரஸ்யமான காட்சிகள் எதுவுமில்லாத நிலையில் படத்தின் 3டி காட்சிகள் ஆச்சரியப்படுத்தினால் உண்டு. படம் ஜூன் மாதம் வெளியாகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE