ஹிர்த்திக் ரோஷனின் ‘வார் 2’ மூலம் பாலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் அறிமுகம் 

By செய்திப்பிரிவு

ஹிர்த்திக் ரோஷனின் ‘வார் 2’ படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகிறார்.

பாலிவுட் சோர்ந்திருந்த காலத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் தென்னிந்திய திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்தின. குறிப்பாக ‘புஷ்பா தி ரைஸ்’, ‘ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட படங்கள் வட மாநிலங்களில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக வாரிக் குவித்தன. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆஸ்கர் மேடையில் அங்கீகாரம் பெற்றதும், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு பாலிவுட்டில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக தென்னிந்திய நடிகர்களை பாலிவுட்டில் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஹிர்த்திக் ரோஷனின் ‘வார் 2’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘வார்’ படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்பட்சத்தில் இதன் மூலம் பாலிவுட்டில் அவர் அறிமுகமாக உள்ளார்.

தற்போது ஜூனியர் என்டிஆர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜான்விகபூரின் தெலுங்கில் அறிமுகமாகும் ‘என்டிஆர் 30’படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE