ஓம் புரி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படும்: நந்திதா புரி

 

மறைந்த நடிகர் ஓம் புரியின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தயாராகவுள்ளது என அவரது மனைவி நந்திதா புரி தெரிவித்துள்ளார்.

ஆக்ரோஷ், அர்த் சத்யா, சாச்சி 420 உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஓம்புரி, கடந்த ஜனவரி மாதம் காலமானர். அவர் மறைவுக்கு பல முன்னணி தலைவர்களும், நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

அன்லைக்லி ஹீரோ: தி ஸ்டோரி ஆஃப் ஓம் புரி எனப் பெயரிடப்பட்ட புத்தகத்தை எழுதியுள்ள நந்திதா, அந்த புத்தகத்தின் அடிப்படையில் படத்தை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

ஓம் புரியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 2009ல் வெளியானது. தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை அதில் குறிப்பிடதற்காக மனைவி மீது அதிருப்தியில் இருந்தார் ஓம் புரி. அப்போதிலிருந்தே இருவருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது.

மேலும் இது பற்றி பேசுகையில், "ஓம் புரி வேடத்தில் நடிக்க யாரும் தேர்வு செய்யப்படவில்லை. அது மிகக் கடினமும் கூட. இப்போதுதான் திரைக்கதை உருவாகி வருகிறது. புத்தகத்திலிருந்து சில பகுதிகள் படத்தில் இருக்கும். அவரது போராட்டத்தை மையப்படுத்தி கதை இருக்கும். அப்படித்தான் அவர் விரும்பினார்.

ஒரு பத்திரிகையாளராக நான் அவரை பேட்டி காண சென்றிருந்தேன். அவர் மிகவும் எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர். குடும்பத்துக்காக, 6 வயதில், டீ கடையில் வேலை செய்திருக்கிறார்.

பல கடினமான சூழல்களை அவர் சந்தித்துள்ளார். திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது பட்டினியோடு இருந்திருக்கிறார். கிரிஷ் கர்னார்ட் மட்டும் இல்லையென்றால் அவரால் திரைத்துறையில் நுழைந்திருக்க முடியாது. அதில் கிடைத்த ரூ.3000த்தைக் கொண்டு கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்.

பிரபல இயக்குநர் ஷ்யாம் பெனகல் என்னிடம் ஓம்புரி பற்றி சொல்லியிருக்கிறார். ஓம்புரி மும்பையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏழ்மையிலும், ஒல்லியாகவும் இருந்திருக்கிறார். மஞ்சள் காமாலை நோய் தாக்கிய போது அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா என்று கூட அவருக்கு தெரியாது. இப்படி அவர் வாழ்க்கையில் சிறு வயதிலிருந்து பிறருக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் நடந்த பல சம்பவங்கள் இருக்கின்றன." என்று நந்திதா கூறினார்.

ஓம் புரி, சிட்டி ஆஃப் ஜாய், வொல்ஃப், தி கோஸ்ட் ஆஃப் டார்க்னஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE