உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்தது தங்கல்

சீனாவில் 300 கோடி வசூலைக் கடந்ததைத் தொடர்ந்து, உலக அளவில் மொத்த வசூலில் 1000 கோடியைக் கடந்துள்ளது.

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான படம் 'தங்கல்'. 2016-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது 'தங்கல்'.

தற்போது சீனாவில் இப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. அங்கும் வசூலைக் குவித்து வருகிறது. சீனாவில் 'தங்கல்' வெளியான 5 நாட்களில் 123.67 கோடி வசூல் செய்திருப்பதாக பாலிவுட் திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சீனாவில் 'தங்கல்' வெளியான 9 நாட்களில் 300 கோடியைக் கடந்துள்ளது. இதன் மூலமாக சீனா இன்றி 700 கோடியை கடந்திருந்தது. சீனா வசூலையும் சேர்த்து மொத்த வசூல் 1000 கோடியை கடந்துள்ளது.

இந்தியாவில் தயாராகி 1000 கோடி வசூலைக் கடந்த இரண்டாவது படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது 'தங்கல்'. ஏற்கெனவே 'பாகுபலி 2' வசூல் 1000 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE