ஷாருக்கானின் ‘பதான்’ படத்துக்கு சென்சாரில் சிக்கல் - நடப்பது என்ன?

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் பாடல்கள் உள்ளிட்ட சில காட்சிகளை மாற்றி மீண்டும் சமர்ப்பிக்குமாறு படக்குழுவுக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் வலியுறுத்தியுள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘பதான்’ திரைப்படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடலின் வீடியோ அண்மையில் வெளியானது. அதில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி ஆடையும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்தவாறு டூயட் பாடுகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நடிகர்கள் தீபிகா, ஷாருக் அணிந்திருந்த ஆடை நிறத்தை சுட்டிக்காட்டி “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். அவரின் இந்த கருத்தைத் தொடர்ந்து விவாதங்கள் எழுந்தன. ஜனவரியில் இந்தி, தமிழ், தெலுங்கில் ‘பதான்’ வெளியாக உள்ள சூழலில், சான்றிதழுக்காக, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு படம் அனுப்பபட்டது.

படத்தைப் பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, “படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் உள்ளிட்ட பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்களை செயல்படுத்தி, திருத்தப்பட்ட பதிப்பை தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பு சமர்ப்பிக்கும்படி படக்குழுவுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “ஒரு படைப்புக்கும், சென்சிட்டிவான பார்வையாளர்களுக்கும் இடையே சரியான சமநிலையை சென்சார் போர்டு உறுதி செய்கிறது. இவை யாவும் முறையாக பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அதேசமயம், மகத்தான நமது கலாசாரமும், நம்பிக்கையும் சிக்கலானதும், நுணுக்கமானதும் என்பதை நான் மீண்டும் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். அதனை நாம் கவனமாக கையாள வேண்டும். நான் முன்பே கூறியது போல், படைப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கையை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. படைப்பாளிகள் அதை நோக்கி உழைக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE