“பிளவுபடுத்தும் குறுகிய தன்மையால் இயக்கப்படும் சமூக ஊடகங்கள்” - ஷாருக்கான் கவலை

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ‘பேஷரம் ரங்’ பாடலின் வீடியோ சர்ச்சைக்கு உள்ளான நிலையில், பிளவுபடுத்தும் குறுகிய தன்மையால் சமூக ஊடகங்கள் இயக்கப்படுகின்றன என்று நடிகர் ஷாருக்கான் கவலை தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த ‘பதான்’ திரைப்படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடலின் வீடியோ அண்மையில் வெளியானது. அதில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி ஆடையும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்தவாறு டூயட் பாடுகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நடிகர்கள் தீபிகா, ஷாருக் அணிந்திருந்த ஆடை நிறத்தை சுட்டிக்காட்டி “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். இணையவெளியில் இது தொடர்பாக காரசார வாதங்கள் எழுந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அத்துடன், சமூக வலைதளங்களிலும் ‘பதான்’ படத்துக்கு எதிராக புறக்கணிப்புப் பிரச்சாரம் நடந்து வருகிறது.

இந்தப் போக்குகள் குறித்து நடிகர் ஷாருக்கான் மறைமுகமாக பதிலளித்துள்ளார். கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, “எப்படி இருக்கீங்க எல்லாரும், நலமாக இருக்கிறீர்கள்தானே... எனது ரசிகர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் எப்போதும் நல்ல எண்ணங்களையே பரப்புங்கள். நாம் நல்ல எண்ணங்களை கொண்டவர்கள்.

நமது காலத்தின் கதை, சமூக ஊடகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளவுபடுத்தும் குறுகிய தன்மையால் சமூக ஊடகங்கள் இயக்கப்படுகின்றன. சமுக ஊடகங்கள் சினிமாவை எதிர்மறையாக பாதிக்கின்றன என்ற நம்பிக்கைக்கு மாறாக, சினிமா முக்கியத்துவம் பெறுவதாக உணர்கிறேன். சினிமாவுக்கு இன்னும் முக்கியமான பங்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

கருணை, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என மனிதகுலத்தின் அபாரமான திறனை சினிமா நம் முன் கொண்டு வருகிறது. மனிதகுலத்தின் இயல்பைப் தக்கவைக்க சினிமா சிறந்த இடம். வெவ்வேறு நிறங்கள், சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்வதற்கான வாகனம்தான் சினிமா” என்றார் ஷாருக்கான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE