இந்திய சினிமாவில் 2016-ம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தங்கல்' இந்திப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தேன். அதில் கவனம் ஈர்த்த 10 அம்சங்கள் இங்கே:
* நம் சினிமாவில் நடிகர்கள் என்றாலே ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்துவதுதான் அதிகம். எப்போதாவது பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து படங்கள் வெளிவரும். அப்படி ஒரு குறிஞ்சிப் பூவாக நம் கண் முன்னே திரையில் விரிகிறது 'தங்கல்'. அதுவும், ஆமீர்கான் எனும் முன்னணி நடிகரின் பின்புலத்தில் பெண்களை மையப்படுத்திய கதையும் திரைக்கதையும் அழுத்தமாக பின்னப்பட்டுள்ளது.
* நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான், சாக்ஷி தன்வார், ஃபாத்திமா சனா சைக், சான்யா மல்கோத்ரா நடிப்பில் வெளிவந்திருக்கிறது 'தங்கல்'. ஆமிர்கான் தயாரித்து, 'மகாவீர் சிங் போகாட்' கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை; மாறாக, வாழ்ந்திருக்கிறார். ஆம், படம் தொடங்கிய சில நிமிடங்களில் ஆமிர்கானை நாம் திரையில் காண இயலாது. அந்த அளவுக்கு உடலளவிலும் உடல் மொழியளவிலும் மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.
* நாட்டுக்காக மல்யுத்தத்தில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போக, அதனை தனக்கு பிறக்கப் போகும் மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஆமிர்கான். ஆனால், அவருக்கோ பிறந்த நான்கு குழந்தைகளுமே பெண்கள். இறுதியில், 'ஏன் ஆண்களால் மட்டும்தான் தங்கம் வென்று சாதனை படைக்க இயலுமா? பெண்களால் முடியாதா?' என தனது முதல் இரண்டு பெண்களையும் மல்யுத்தத்துக்கு தயார்படுத்துகிறார். அந்தப் பயிற்சி என்னவானது, இந்தியாவுக்கு தங்கம் கிடைத்ததா என்பதுதான் 'தங்கல்'.
* இந்திய திரையுலகில் விளையாட்டுப் பின்னணியில் இப்போது ஓரளவு படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் நாயகனை துதிபாடியே பல காட்சிகள் இடம்பெற்றிருப்பதைப் பார்க்காலாம். ஆனால் 'தங்கல்' இதிலும் தனித்துவம் காட்டுகிறது. மகாவீர் சிங் போகாட் என்பவரின் நிஜக் கதையை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள். இதில் நாயகனை முன்னிலைப்படுத்தும் காட்சிகள் மிகவும் குறைந்தளவில் உள்ளன. ஆனால், மிகச் சரியான இடத்தில் ஸ்கோர் செய்யவும் அவர் தவறவில்லை.
* ஆமிர்கான் உடன் வரும் கீதா (ஃபாத்திமா சனா சைக்) மற்றும் பபிதா (சான்யா மல்கோத்ரா) இருவரின் நடிப்பு கவரும் விதத்தில் உள்ளன. மல்யுத்தத்தை கற்றுக்கொண்டு நடித்துள்ளார்கள் என்பது அவர்கள் போட்டியிடும் காட்சிகள் மூலம் உணர முடிகிறது. சிறுகுழந்தைகளாக அப்பாவின் பயிற்சிக்கு பயப்படுவது, எப்படி அதிலிருந்து தப்பிக்கலாம் என திட்டமிடுவதில் தொடங்கி போட்டிகளில் ஜெயிப்பது வரை இருவரின் நடிப்புமே கச்சிதம்.
* கீதாவாக நடித்திருக்கும் ஃபாத்திமா சனா சைக், ஆமிர்கானுடன் போட்டியிட்டு நடித்துள்ளார். அப்பாவிடம் கற்றுக் கொண்டு இந்தியளவில் பதக்கங்களை வெல்வது, பிறகு உலகளாவிய மல்யுத்தத்தில் தோற்பது என நடிப்பில் அசத்தியுள்ளார். இதற்கு உதாரணமாக இரண்டாம் பாதியில் தந்தையுடன் ஆக்ரோஷமாக மோதும் காட்சி, தந்தையிடம் மன்னிப்புக் கேட்டு அழும் காட்சியைச் சொல்லலாம். தந்தையை ஜெயித்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, "அப்பா, உன்னிடம் அவருடைய பயிற்சி பழமையானதால் தோற்கவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது" என்று தங்கை கூறும் காட்சியை படமாக்கிய விதம் இயக்குநரின் திரைமொழிக்கு சான்று.
* 'சில்வர் மெடல் ஜெயித்தால், அந்தத் தருணத்தில் பேசிவிட்டு மறந்துவிடுவார்கள். தங்கம் ஜெயித்தால் முன்னுதாரணமாக நிற்பாய். உன்னை உதாரணம் காட்டிக் கொண்டே இருப்பார்கள்', 'தங்கம் எப்படிக் கிடைத்தாலும் தங்கம் தான். பையன் வாங்கினால் என்ன... பெண் வாங்கினால் என்ன?', 'நம்ம பொண்ணுங்க பசங்களை விட கம்மினு நினைச்சியா?' என பல இடங்களில் வசனங்கள் மூலமாகவும் தெறிக்கவிட்டிருக்கிறார்கள் தங்கலில்.
* சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், ப்ரீதமின் பாடல்களும் படத்துக்கு மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கின்றன. அதிலும் பஞ்சாப் வீட்டில் அமைக்கப்பட்ட காட்சிகளும், மல்யுத்த போட்டிகளும் ஒளிப்பதிவாளரின் உழைப்பைக் காட்டுகின்றன. பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு நம்மைப் பிணைத்து உத்வேகம் ஊட்டுகின்றன.
* கதைக்குத் தேவையான அளவில் மட்டுமே தன்னுடைய இருப்பை சரியாக காட்டிக்கொண்டாலும், தன் இயல்பு மீறாத நடிப்பால் சில இடங்களில் பிரித்து மேய்ந்திருப்பார். குறிப்பாக, அந்த இறுதிக் காட்சியில் தனியாக இருந்தபடி தன் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது ஒட்டுமொத்த ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளுவது உறுதி.
* திரையுலகில் காலம் கடந்து ஒரு சில படங்கள் பேசப்படும். அந்த வரிசையில் 'தங்கல்' இடம்பெறும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்று வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல், உண்மையை அடிப்படையாக வைத்து, 'பெண்களால் எதுவும் சாத்தியம்' என்பதை 'தங்கல்' மூலம் நிழல் வடிவில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஆமிர்கான் - நிதேஷ் திவாரி படக்குழுவிடம் நம் திரையுலகம் சொல்லும்: "உங்களால் பெருமிதம் கொள்கிறோம்!"
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago