தங்கல் டப்பிங்கை ரஜினி தவிர்த்தது ஏன்?- அமீர்கான் விளக்கம்

'தங்கல்' தமிழ் டப்பிங் விவகாரத்தில் என்ன நடந்தது என்று மும்பையில் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தங்கல்'. இப்படத்துக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டிசம்பர் 23-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தனது நெருக்கமான நண்பர்களுக்கு திரையிட்டு காட்டினார் அமீர்கான். அவர்கள் அப்படம் பற்றிய தங்களுடைய கருத்துகளை தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

அமீர்கான் திரையிட்டு காட்டியதில் ரஜினியும் ஒருவர். அப்படம் முடிந்தவுடன் அமீர்கானை வெகுவாக பாராட்டியிருக்கிறார் ரஜினி. அப்போது அமீர்கான் "இதன் தமிழ் டப்பிங், நீங்கள் பேச முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். "இவ்வளவு நேர்த்தியான படத்துக்கு என்னுடைய குரல் சரியாக இருக்காது. வேறு யாராவது வைத்து பேசச் சொல்லுங்கள்" என்று ரஜினி கூறியதாக தகவல் வெளியானது.

'தங்கல்' டப்பிங்கில் நடந்தது என்ன என்பது குறித்து மும்பையில் அமீர்கான் பேசியிருக்கிறார். "தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் 'தங்கல்' டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. ரஜினி சாரை நான் அணுகிய உண்மை தான். அவருக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அவருடைய குரலில் டப்பிங் செய்யப்பட்டால் அனைவராலும் அவரது குரல் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் என்பது தெரிந்து இருவருமே வேண்டாம் என தீர்மானித்தோம்.

அவர் மிகவும் பிரபலமானவர். அவருடைய குரல் என்னுடைய முகத்துக்கு பொருந்தாது. நான் என்ன நினைத்தேனோ, அதையே தான் அவரும் நினைத்தார். படம் மிகவும் பாராட்டி என்னை ஊக்குவித்தார்" என்று தெரிவித்திருக்கிறார் அமீர்கான்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE