சர்ச்சை விளம்பரம் | “மத உணர்வுகளைப் புண்படுத்தாதீர்” - ஆமீர் கானுக்கு ம.பி அமைச்சர் அறிவுரை

By செய்திப்பிரிவு

சர்ச்சைக்குரிய விளம்பரம் தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர், பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு யாருடைய உணர்வுகளை புண்படுத்த உரிமையில்லை என்று கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஆமீர் கான், கியாரா அத்வானியுடன் இணைந்து அண்மையில் நடித்த விளம்பரம் ஒன்று விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 விநாடிகள் ஓடும் அந்த விளம்பரத்தில் திருமணம் முடித்த ஆமீர் கானும், கியாரா அத்வானியும் வீட்டிற்கு திரும்புகின்றனர். "பிடாய்" என்று அழைக்கப்படும் திருமணத்திற்குப் பிந்தைய விழாவின்போது இருவரும் அழாமல் இருந்தது குறித்து தம்பதியினர் கலந்துரையாடுகின்றனர். தொடர்ந்து ஆமீர் கான் அவரது மனைவியின் வீட்டுக்கு செல்வது போலவும், அவர் தனது வலதுகாலை வைத்து வீட்டிற்குள் நுழைவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில் சிறிய மாற்றங்கள், பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உதவும் என ஆமீர் கான் கூறுவது போல அந்த விளம்பரம் நிறைவடைகிறது.

பொதுவாக திருமணத்திற்கு பின் மணமகள்தான் மணமகன் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால், இந்த விளம்பரம் இந்திய பாரம்பரிய கலாசாரத்திற்கு எதிராக இருப்பதாக விவாதங்கள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஆமீர் கானின் இந்த விளம்பரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ''நடிகர் அமீர் கானின் தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்தேன். இந்திய மரபு, கலாசார பழக்கவழக்கங்களை மனதில் வைத்து இதுபோன்ற விளம்பரங்களில் அவர் நடிக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். இதை நான் பொருத்தமானதாக கருதவில்லை.

ஆமீர் கானிடமிருந்து தொடர்ந்து இந்திய கலாசார, மரபுகளை மீறும் செயல்கள் வெளிப்படுவதை கவனித்து வருகிறேன். இத்தகைய செயல்களால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகள் புண்படுத்தப்படுகின்றன. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த ஆமீர் கானுக்கு உரிமையில்லை'' என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து #BoycottAUSmallFinanceBank மற்றும் #BoycottAamirKhan போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

முன்னதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்தரி, ‘சமூக மற்றும் மத மரபுகளை மாற்றுவதற்கு வங்கிகள் எப்போது பொறுப்பாளர்களானார்கள்? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஊழலற்ற வங்கி முறையை மாற்றும் செயல்பாடுகளில் வங்கி இறங்க வேண்டும். இப்படியான விளம்பரங்களை எடுத்துவிட்டு பின்பு, இந்துக்கள் விமர்சிக்கிறார்கள் என கூப்பாடு போடுவது. முட்டாள்கள்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE