'பாய்காட் லால் சிங் சத்தா', 'பாய்காட் விக்ரம் வேதா', 'பாய் காட் பிரம்மாஸ்திரா' என போன்ற முழக்கங்கள் சமூக வலைதளங்களை நொறுக்கிக் கொண்டிருக்கின்றன. ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்கு எதிர்வினையாற்றுவதாக நினைத்துக் கொண்டு, நூற்றுக்கணக்கானோரின் உழைப்பில் உருவாகும் ஒரு படத்தை முற்றிலும் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம் என திரை விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறைந்தபட்சம் படம் சொல்ல வரும் கருத்தையோ, படத்தின் மீதான விமர்சனத்தையோ, முன்வைக்காமல், படம் வெளியாவதற்கு முன்பே, படத்தின் மீதான எதிர்மறை பிம்பத்தை உருவாக்கி, அதில் குளிர்காயும் இந்த 'பாய்காட்' ட்ரெண்டிங் கலையுலகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு படத்தை முழுமையாக புறக்கணித்து ஒன்றுமேயில்லாமல் ஆக்குவதற்கு உங்கள் ட்விட்டரின் ஒரு போஸ்ட் போதுமானதாகிறது. இதில் பலிகாடா ஆனதுதான் ஆமீர்கானின் 'லால் சிங் சத்தா' திரைப்படம். 2015-ம் ஆண்டு 'நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது' என அவர் பேசியதற்காக அவரின் படங்கள் புறக்கணிக்கப்படுவதாக நெட்டிசன்கள் காரணங்களை முன்வைக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது, அவர் சொன்ன கருத்து, தற்போதைய 'பாய்காட்' வெறுப்பு பிரசாரத்தை உண்மை என்றாக்கவில்லையா என திரை ஆர்வலர்கள் பலரும் அழுத்தமான கேள்வியை முன்வைக்கின்றனர்.
» ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலினை வைத்து வெளியிட திட்டமா?
» திருச்சிற்றம்பலம், ஜீவி 2 - தமிழ்ப் படங்களில் இந்த வார ரிலீஸ்
பாய் காட் பாக்ஸ் ஆபீஸை பாதிக்குமா? - இந்த 'புறக்கணிப்பு' (boycott) என்ற வார்த்தையை வெளியிலிருந்து ஒருவர் பார்ப்பதற்கும், அந்தப் படத்தைச் சேர்ந்தவர் பார்ப்பதற்கும் மலையளவு வித்தியாசம். நீண்டதொரு உழைப்பையும், பணத்தையும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் முதலீடாக்கிய ஒருவரை ஒன்றுமேயில்லாமல் ஆக்கிவிடுகிறது 'பாய்காட்'. ட்விட்டரில் படத்தை புறக்கணிக்கச் சொன்னால், அது படத்திற்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், அதன் தற்போதைய நேரடி உதாரணம் 'லால் சிங் சத்தா'. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆமீர்கானின் ஓப்பனிங் குறைந்துள்ளதாக திரை வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களை பெற்றபோதிலும், அதன் பாக்ஸ் ஆபீஸ் பாதிப்புக்கான காரணம் பாய் காட். 5 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட்டின் பர்ஃபெக்சனலிஸ்ட் என அழைக்கப்படும் மிகப் பெரிய நடிகர் ஒருவரின் படம் ரூ.50 கோடியை எட்டவே 5 நாட்களுக்கு மேலாகிறது என்றால், பாய்காட்டின் தீவிரத்தை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தப் படத்தின் ஐம்டிபியில் சுமார் 1.4 லட்சம் பேர் தங்கள் ரேட்டிங்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையையும், படத்தின் வசூலையும் கணக்கிட்டால் படத்தை பார்க்காமலேயே ஏராளமானோர் நெகட்டிவ் ரேட்டிங்குகளை பதிவு செய்துள்ளது தெளிவாகிறது. ஒரு படத்தை பார்க்காமலேயே வார்க்கப்படும் வன்மம் உண்மையில் நியாயமானதா?
பாய் காட் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் அக்ஷய் குமார், ''ஒரு திரைப்படம் தயாரிக்கப்படும்போது, அதில் நிறைய பணமும் உழைப்பும் இருக்கிறது. அது இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. உண்மையில் மறைமுகமாக நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம், இதை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார். கடந்த காலங்களிலும் 'பிகே', 'பத்மாவத்', 'மை நேம் இஸ் கான்' படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இன்றைய ட்ரெண்டிங் வளர்ச்சி அதையெல்லாம் கடந்த அசுர வடிவத்தை பெற்றிருக்கிறது.
இந்த பாய்காட்டை ஊக்குவிக்கும் போக்கு படங்களின் வர்த்தகத்தை மட்டுமல்லாமல், அதை நம்பியிருக்கும் விநியோகஸ்தரர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலரது வாழ்க்கையையும் சேர்த்தே பாதிக்கிறது. கரோனா தொற்றுக்கு பிறகு திரையுலகம் மெள்ள மீண்டு வரும் சூழலில், இந்த பாய்காட் நடைமுறை திரைத்துறையை மீண்டும் பாதாளத்திற்கு இட்டுச் செல்கிறது.
குறிப்பாக பாலிவுட் மோசமான நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது. கடந்த காலங்களில் வெளியான 'ரன்வே 34', 'ஜெர்சி', 'ஹீரோபண்டி 2', 'பச்சன் பாண்டே', 'சாம்ராட் பிருத்விராஜ்', 'தாகத்', 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்', 'ஷம்ஷேரா எஃப்' படங்களின் தோல்வி பாலிவுட்டை கரையானாக அரித்துக் கொண்டிருக்கும் வேளையில், லால் சிங் சத்தாவும் இதில் இணைந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக தாங்கள் வெறுக்கும் ஒரு படத்தை பாராட்டியதற்காகவே மற்றொரு படத்தை புறக்கணிக்கச் சொல்வது எத்தனை மோசமான நடைமுறை. 'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் படத்திலும் அதுதான் நடந்தது. 'லால் சிங் சத்தா' பாய்காட்டுக்கு பிறகு 'பாய்காட் விக்ரம்வேதா' (#BoycottVikramVedha) ட்ரெண்டானது. இதற்கு காரணம் 'லால் சிங் சத்தா' படத்தை ஹிர்த்திக் ரோஷன் பாராட்டியதும் நெட்டிசன்கள், ஹிர்த்திக் நடிக்கும் விக்ரம் வேதாவை புறக்கணிக்க சொல்லி கூப்பாடிட்டு வருகின்றனர்.
தற்போது பாலிவுட்டில் தற்போது தீவிரமாகி வரும் இந்தப் போக்கு திரைத்துறையின் மீது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இறுதியாக லால் சிங் சத்தா படம் வெளியாவதற்கு முன்பு மன்னிப்புக் கேட்ட ஆமீர்கான் கூடுதலாக, 'படத்தின் மீதான எதிர்பார்ப்பு கலந்த பயத்தின் காரணமாக 48 மணி நேரம் தூங்கவில்லை. படம் வெளியான பிறகு தான் உறங்குவேன்'' என்றார். அப்படிப் பார்க்கும்போது பாய்காட் அவரது தூக்கத்தை மட்டுமா கெடுத்தது?
இந்தப் புறக்கணிப்பு அரசியல் ஒரு பக்கம் இருக்க, பாலிவுட்டில் ‘கன்டென்ட்’ வறட்சி என்ற வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஓடிடி வருகைக்குப் பிறகு, பாலிவுட் ரசிகர்களின் ரசனையும் மேம்பட்டுள்ளது. வழக்கமான மசாலா, டெம்ப்ளெட் சினிமா மீதான மோகம் வெகுவாக குறைந்து, உள்ளடக்கம் அழுத்தமாக உள்ள சினிமாவையே சினிமாவையே அவர்கள் விரும்புகின்றனர். இதனால்தான் தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பலவும் டப்பிங் செய்யப்பட்டு பாலிவுட்டில் கல்லா கட்டுவதையும் காண முடிகிறது. பாப்புலரான படங்களை ரீமேக் செய்வது, டெம்ப்ளேட் திரைக்கதையை பின்பற்றுவது என்பதை எல்லாம் மாற்றிக் கொண்டு அசல் சினிமாவைத் தந்தால் மட்டுமே பாலிவுட் தப்பிப் பிழைக்கும் என்ற கருத்தையும் புறக்கணித்துவிட முடியாது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago