‘பாலிவுட்டின் பாட்ஷா’ - திரையுலகில் 30 ஆண்டுகளைக் கடந்து ‘மீண்டெழ’ துடிக்கும் ஷாருக்கானின் கதை

By கலிலுல்லா

'எஸ்ஆர்கே' என உலக அளவில் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஷாருக்கான் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. திரைத்துறையில் 30 ஆண்டுகள் என்பது ஒரு தடியை கையிலேந்தி கையிற்றில் நடப்பது போல. பேலன்ஸ் மிகவும் முக்கியம். தவறினால், தடியோடு சேர்ந்து அதில் நடப்பவரும் காலி.

இந்தியாவிலேயே பெரிய சினிமா இன்டஸ்ட்ரி என்றால் அது 'பாலிவுட்'. டெல்லியியின் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், பாலிவுட் சினிமா சிட்டி என அழைக்கப்படும் மும்பையையும் கட்டி ஆண்ட கதைதான் ஷாருக்கானுடையது.

1989-ம் ஆண்டு 'ஃபாஜி' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் கேமராவின் கண்களில் சிக்கியவர், இரண்டு ஆண்டுகள் தேடுதலுக்குப் பிறகு 1992-ல் 'திவானா' படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார். அன்று 'பாலிவுட்டின் பாட்ஷா' ஒருவர் உள்ளே நுழைந்திருப்பதை ரசிகர்கள் உணர்ந்திருக்கவில்லை. காரணம், அந்த பாலிவுட் குகைக்குள் ஏற்கெனவே இரண்டு சிங்கங்கள் முட்டி மோதிக்கொண்டிருந்தன.

அது ஒரு 'கான்'களின் காலமாக இருந்தது. ஷாருக்கானின் முதல் படம் வெளியாகும்போது, சல்மான் கான் ஏறக்குறைய 10 படங்களில் நடித்து முடித்துவிட்டார். மறுபுறம் அமீர்கான் 15 படங்களை தொட்டுவிட்டார். எல்லோரும் கான்களின் படங்களை நோக்கி போயிக்கொண்டிருந்தபோது, 'யாரோ ஷாருக்கானாம். பாக்க நல்லா தான் இருக்கான்’ என பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

ஆனால், உண்மையில் ஷாருக்கான் அப்போது தன்னை அப்படி கருதவில்லை. மாறாக, ''நான் நடித்த படத்தின் காட்சிகளை முதன்முறையாக திரையில் பார்த்தேன். நீங்கள் ஒரு காட்சியில் நடித்து முடித்த பிறகு அதிலுள்ள நெகட்டிவ் மட்டுமே உங்களுக்கு தெரியும். அப்போது உங்களுக்குள் முழுமையாக எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். அதேபோலத்தான் எனக்கும். நான் நடித்த காட்சிகளை பார்க்கும்போது என்னை அசிங்கமாக இருப்பவனாக உணர்ந்தேன்.

என்னுடைய தலைமுடி மோசமாக இருந்தது. அந்தக் காட்சிகளைப் பார்த்தபிறகு என்னால் நடிகனாக முடியாது என தோன்றியது. என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை நம்ப முடியவில்லை.''

- கடந்த 2018-ம் ஆண்டு பேட்டி ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருந்தார் ஷாருக்கான். இந்தப் பழைய வரலாறுகளை ஒதுக்கிவிட்டு, அவரின் திரை ஆதிக்கத்தைப் பற்றி மட்டும் பேச அவ்வளவு இருக்கிறது. காரணம், பாலிவுட்டில் 30 ஆண்டுகள் என்பது ஷாருக்கான் கொஞ்சம் கொஞ்சமாக கட்டியெழுப்பிய சாம்ராஜ்ஜியம்.

யூடியூப்பிலோ, ஓடிடியிலோ எந்த தளத்தில் சென்று கண்ணை மூடிக்கொண்டு ஷாருக்கான் படங்களை போட்டாலும், அதில் 10-ல் 8 காதல், ரொமான்ஸ், குடும்ப பின்னணி கொண்ட படங்களாகவே இருக்கும். அது யுவதிகள் மனதில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. பெண்களின் அறைகளில் ஷாருக்கானின் பிம்பங்கள். மனதிலும் கூட. அதனால் தான், 'கிங் ஆஃப் ரொமான்ஸ்' என புகழப்பட்டார். 'ராகுல் நாம் தோ சுனா ஹோகா' என்பது அவரது ட்ரேட் மார்க் வசனம் மூலம் தனக்கென ஒரு ரூட்டைப்போட்டுக்கொண்டார்.

சொல்லப்போனால், அமிதாப் பச்சனுக்கு கிட்டியதை விட பல மடங்கு அதிகமாகவே ஷாருக்கானுக்கு கிட்டியது. மிகையாக தோன்றினாலும் அதுதான் உண்மை. 1995 முதல் 2005 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போட்டிக்கு ஆளே இல்லாமல் தனி சாம்ராஜ்ஜியம் நடத்திய பாட்ஷாவாக இருந்தார் ஷாருக். நடிக்க வந்த ஐந்தாறு ஆண்டுகளில் பெயர், புகழ், வருவாய், ஆளுமை என உச்சம் தொட்ட ஒரே நடிகர் ஷாருக்கானாக மட்டுமே இருக்க முடியும். இந்தி / இந்திய சினிமாவை உலகின் பல நாடுகளிலும் மார்க்கெட்டிங் - வியாபாரம் செய்ய அவரது முகமே பிரதானமாக செயல்பட்டது.

ரொமான்ஸுடன் சேர்ந்த அவரது காமெடி ரசிகர்களை கட்டிப்போட்டது. அப்படியான நேரத்தில் தான் 'தில்வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே' (1995) படம் ஷாருக்கானிடம் வந்து சேர்ந்தது. ஒட்டுமொத்த பாலிவுட்டையும் மிரட்டிய அந்தப் படம் மும்பையின் மராத்தா மந்திர் திரையரங்கில் 1,274 வாரங்கள் ஓடியது; அதாவது 25 வருடங்கள். படம் வேற லெவல் ஹிட்டானது. குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தவர்களை இறுதியில் ஆனந்தக் கண்ணீருடன் அனுப்பிவைத்தார் ஷாருக்கான். இந்தப் படம் அவருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒருவரிடம் உங்களுக்கு தெரிந்த இந்திப் படத்தை சொல்லுங்கள் என்றால், 'தில் வாலே துல் ஹனியா' என்றுதான் சொல்வார். அந்த அளவுக்கு பாலிவுட்டின் அடையாளமாக மாறியிருந்தது.

'பாஸிகர்', ‘பர்தேஸ்’, 'குச் குச் ஹோதா ஹை', 'தில் தோ பாகல் ஹை', 'தில் சே', 'மொஹப்பத்தீன்', 'கபி குஷி கபி கம்', 'கல் ஹோனா ஹோ', 'மே ஹீ னா', 'ரப் னே பனாதி ஜோடி' என இனி காதல் கதைகளே இல்லை என்ற அளவுக்கு தேடிதேடி காதல் சப்ஜெக்ட்களில் நடித்தார். நடுவில் கொஞ்சம் வித்தியாசங்களைக்காட்டினாலும், காதலிலிருந்து அவர் மீளவேயில்லை. சொல்லபோனால் அது அவருக்கு பெரும் பலம் சேர்ந்தது. குறிப்பாக கைகளை விரித்து, உடலை வளைக்கும் அவரது சிக்னேச்சர் போஸ் ரசிகர்களுக்கு உற்சாக டோஸ்!

தனக்கென தனித்துவமான பாதையை வகுத்ததால்தான் அவர் 'பாலிவுட்டின் பாட்ஷா' வாக உயர்ந்து நிற்கிறார்.

'சாம்ராட் அசோகா', 'ஸ்வதேஷ்', 'சக் தே இந்தியா', 'டான்', 'டியர் ஜிந்தகி', 'பெஹலி, வீர் ஸாரா', 'தர்', 'கபி ஹல்விதா நா கெஹனா', 'மை நேம் ஈஸ் கான்' படங்களின் மூலம் காதல் சப்ஜெக்ட்களுக்கு விடுமுறையிட்டு தனித்துவத்தைக் காட்டினார்.

எல்லைகளை, கண்டங்களைக் கடந்து உலக அளவில் ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் ஷாருக்கான். அதனால்தான் கடந்த 2011-ம் ஆண்டு 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' அவருக்கு 'தி வேர்ல்ட்ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்' என்ற பட்டத்தை வழங்கியது. 30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ஷாருக்கான் இந்திய அரசின் மிக உயரிய விருதான 'பத்மஸ்ரீ' சிறந்த குடிமகன் விருதும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளாரகவும் இருந்து சாதித்திருக்கிறார்.

ஆனால், 2013-ல் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திற்கு பிறகு அவரது படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. கடந்த 10 ஆண்டுகள் ஷாருக்கானுக்கும் அவரது ரசிகர்களுக்கும் திருப்தி இல்லாத காலகட்டம்.

இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கடைசியாக 'ஜீரோ' என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு பிறகு, 4 வருடங்களாக அவரை திரையில் காணாமுடியாமல் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் அவரின் 'பதான்' படம் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் 'ஜவான்' ரிலீஸாகிறது. வரும் ஆண்டுகளில் திரைத்துறையில் கவனம் செலுத்தி, தரமான - காலத்துக்கும் பேசும் படைப்புகளை வழங்க வேண்டும் என்பதே இந்த 30-ஆவது ஆண்டில் ஷாருக்கானிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்