முதல் பார்வை-‘பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா’

By செய்திப்பிரிவு

1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் உச்சத்தில் இருக்கும் சமயம். குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரில் உள்ள ஒரு விமான ஓடுதளம் மற்றும் இரண்டு முக்கிய பாலங்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சேதப்படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ள இந்திய ராணுவத்தின் விமானப்படைப் பிரிவு தலைவர் விஜய் கர்னிக (அஜய் தேவ்கன்) மீண்டும் ஒரு புதிய ஓடுதளத்தை உருவாக்க நினைக்கிறார். அவருக்கு சுந்தர்பென் (சோனாக்‌ஷி சின்ஹா) தலைமையில் 300 பெண்கள் உதவுகிறார்கள். இந்த சம்பவமே ‘பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா’.

இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் தொடர்பான இரண்டு படங்கள் இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓடிடியில் நேரடியாக வெளியாகியிருக்கின்றன. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்ற கதைக்கருவை கொண்ட படங்கள் என்பதால் இங்கு ஒப்பீடு தவிர்க்கமுடியாததாகிறது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ‘ஷெர்ஷா’ கார்கில் போர் பின்னணியையும், அதில் வீரமரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

படத்தில் குறைகள் இருந்தாலும் தேசப்பற்று பொங்கி வழியும் வசனங்கள், ஸ்லோ மோஷன் காட்சிகள் எதுவும் இல்லாமலே படத்தின் இறுதி காட்சிகள் நமக்குள் தேசப்பற்றை ஊட்டும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. (ஷேர்ஷா விமர்சனத்தை இங்கு க்ளிக் செய்து படிக்கலாம்).

ஆனால் ‘பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா’வில் நிலைமை தலைகீழ். இந்திய விமானப்படை தளத்தை பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குவதோடு படம் தொடங்குகிறது. நாயகன் அஜய் தேவ்கன் ஒரு ஜீப்பை எடுத்துக் கொண்டு விமான ஓடுதளத்தில் வேகமாக ஓட்டிச் செல்கிறார்.

அப்போது வானில் இருந்து உடைந்து விழும் ஒரு போர் விமானம் அவரது ஜீப்பில் மோதி வெடிக்கிறது. தூக்கி வீசப்படும் நாயகன் சிறிது நேரத்தில் தலையில் ஒரே ஒரு சிறிய காயத்துடன் எழுந்து மீண்டும் ஓடிச் சென்று ஒரு இயந்திர துப்பாக்கியை இயக்கி போர் விமானங்களை சுட்டு வீழ்த்தத் தொடங்குகிறார். இப்படியான லாஜிக் மீறல்கள் க்ளைமாக்ஸ் வரை நீடிக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் யஹ்யா கானிடம் கிழக்கு பாகிஸ்தானை (தற்போதைய பங்களாதேஷ்) இந்தியப் படைகள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர்.

அதற்கு அவர் ‘400 ஆண்டுகளாக நாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த இந்தியாவா?’ என்று கேட்கிறார். பாகிஸ்தான் உருவானதே 1947ஆம் ஆண்டில் தான் எனும்போது அப்படி ஒரு வசனம் எதற்காக என்பது இயக்குநருக்கே வெளிச்சம். ஒரு உண்மைச் சம்பவத்தை கதையின் கருவாக எடுத்துக் கொண்டால் அந்த சம்பவம் குறித்தும் அதில் தொடர்புடைய மக்களின் தியாகத்தையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதே இயக்குநரின் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் மாறாக இங்கு நாயகன் தனி ஆளாக எதிரி முகாமுக்குள் சென்று ஒற்றை ஆளாக அவர்களை அடித்து துவம்சம் செய்வதும், எதிரி நாட்டு ராணுவ தளபதியிடன் ‘ஐயாம் வெயிட்டிங்’ என்கிற ரேஞ்சில் பஞ்ச் டயலாக் பேசி சவால் விடுவதும் படு அபத்தமாக இருக்கின்றன.

அஜய் தேவ்கன், சஞ்சய் தத், சோனாக்‌ஷி சின்ஹா, ஷரத் கெல்கர் போன்ற நல்ல நடிகர்கள் சகட்டு மேனிக்கு வீணடிக்கப்பட்டுள்ளனர். அஜய் தேவ்கன் படம் முழுக்க தூங்கி வழிந்தபடியே இருக்கிறார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் நடிக்கும் அவரிடம் ஒருவித தொய்வு படம் முழுவதும் எட்டிப் பார்க்கிறது. கிராமத்து உளவாளியாக சஞ்சய் தத். மார்கெட்டுக்கு போய் வருவது போல் பாகிஸ்தானுக்கு உள்ளே அடிக்கடி போய்விட்டு வருவதோடு சரி. க்ளைமாக்ஸில் துப்பாக்கிகளோடு தாக்கும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் படையினரை கையில் ஒரே ஒரு கோடாரியோடு வெட்டி வீழ்த்துகிறார்.

சுந்தர்பென்னாக சோனாக்‌ஷி. படத்தில் 30 நிமிடக் காட்சிகள் தான் என்றாலும் சொல்லிக் கொள்ளும்படி நடிப்பு பெரிதாக இல்லை. இரண்டு, மூன்று இடங்களில் உணர்ச்சி பொங்க வசனம் பேசுகிறார். அதிலும் அஜய் தேவ்கனின் மனைவியாக வரும் ப்ரணிதா சுபாஷின் நிலைமை இன்னும் பரிதாபம். படத்தில் அவருக்கு ஒரு வசனம் கூட கிடையாது. படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான பாத்திரம் நோரா ஃபதேஹியுடையது. எதிரிநாட்டில் உளவாளியாக நடிக்கும் கதாபாத்திரத்தில் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் பாராட்டுவதற்குள் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்து போய்விடுகிறார்.

தற்போது மொபைல் கேம்களே தத்ரூபமான கிராபிக்ஸ்களில் வந்து கொண்டிருக்கும் போது, படத்தில் ஓரிரு காட்சிகளைத் தவிர பெரும்பாலான காட்சிகளில் கிராபிக்ஸ் பல்லிளிக்கிறது. குண்டுவெடிப்பு காட்சிகள், போர் விமானங்கள் என எந்த காட்சியிலும் நேர்த்தி இல்லை. படத்தின் கதைதான் 70களில் நடக்கிறது என்றால் படத்தின் திரைக்கதை, வசனங்கள், நடிகர்களின் நடிப்பு என அனைத்துமே 70களின் படங்களை ஞாபகப்படுத்துவதாக இருக்கிறது. பீரியடிக் படம் என்பதை இயக்குநர் தவறாக புரிந்து கொண்டார் போலும்.

பெரும்பாலும் க்ரீன் மேட்டிலேயே எடுத்திருப்பதால் ஒளிப்பதிவு குறித்தும் பெரிதாக சொல்ல ஏதுமில்லை. படத்தின் பின்னணி இசை பெரும்பாலான காட்சிகளில் பழைய இந்தி சீரியல்களின் பின்னணி இசை போல இருக்கிறது.

வரலாற்று சம்பவங்கள் குறித்து படம் எடுக்கும்போது எந்தவொரு மெனக்கெடலோ, அடிப்படையோ, பின்னணி குறித்து ஆய்வோ இல்லாமல் எடுக்கப்படும் இது போன்ற படங்கள் வராமல் இருப்பதே நாட்டுக்காக சண்டையிட்ட தியாகிகளுக்கு செய்யும் கவுரவமாக இருக்கும். படத்தின் தலைப்பு மட்டும்தான் ‘பூஜ்: இந்தியாவின் பெருமை’, மற்றபடி படம் எந்தவிதத்திலும் இந்தியாவை பெருமைப்படுத்தவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE