இணையத்தில் வெளியான கள்ளப் பிரதி: ’மிமி’ படத்தை வேறுவழியின்றி வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்

By செய்திப்பிரிவு

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருந்த ’மிமி’ இந்தித் திரைப்படம் முன்னரே இணையத்தில் கள்ளத்தனமாகப் பதிவேற்றப்பட்டதால் படத்தை இப்போதே நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

க்ரீதி சனோன், பங்கஜ் த்ரிபாதி நடிப்பில், லக்‌ஷ்மண் உடேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நகைச்சுவைப் படம் ’மிமி’. நெட்ஃபிளிக்ஸும், ஜியோ சினிமாஸும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. க்ரீதி சனோன் கதாபாத்திரத்தை முன்வைத்தே இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.

ஜூலை 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னரே ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலும் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை அன்று இந்தப் படம் சில இணையதளங்களில் கள்ளத்தனமாகப் பதிவேற்றப்பட்டுள்ளது. டெலகிராம் செயலியிலும் இந்தப் படத்தின் கள்ளப் பிரதி பகிரப்பட்டு வருகிறது. இது படக்குழுவுக்கும், நெட்ஃபிளிக்ஸ் தரப்புக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இதனால் வேறு வழியின்றி படத்தை திங்கட்கிழமை (இன்று) அன்றே நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இது குறித்து படத்தில் நடித்திருக்கும் பங்கஜ் த்ரிபாதி பேசும் காணொலியை வெளியிட்டு இந்த அறிவிப்பு பகிரப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களில் படங்கள் வெளியானவுடன் கள்ளத்தனமாக இணையத்தில் பதிவேற்றப்படுவது புதிதல்ல. ஆனால் பட வெளியீட்டுக்கு 4 நாட்கள் முன்னரே ஒரு படம் வெளியாகியிருப்பது குறித்து நெட்ஃபிளிக்ஸ் தரப்பு விசாரித்து வருவதாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கள்ளப் பிரதி இணையத்தில் அதிகம் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE