கரோனா தொற்றின்போது தனிமையில் இருந்ததுதான் சவால்: கங்கணா ரணாவத்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றின்போது தனிமையில் இருந்ததுதான் சவாலாக இருந்தது என்று கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கணா ரணாவத். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவி' படத்தில் நடித்து முடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்துப் படமாக்கப்பட்டதாகும்.

'தலைவி' படத்தைத் தொடர்ந்து 'டக்கத்' மற்றும் 'தேஜஸ்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கங்கணா ரணாவத். எப்போதுமே சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துச் சிக்கலில் மாட்டிக் கொள்வார். சமீபத்தில் கூட இவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மே 8-ம் தேதி கங்கணாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்த கருத்து கூட சர்ச்சையாகி, அந்தப் பதிவை நீக்கியது இன்ஸ்டாகிராம்.

கரோனா தொற்றைத் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை எடுத்து வந்தார் கங்கணா ரணாவத். தற்போது கரோனாவிலிருந்து முழுமையாக மீண்டு, தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.

குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கங்கணா ரணாவத் கூறியிருப்பதாவது:

"கரோனா தொற்றுக் காலத்தில் மிகவும் சவாலாக இருந்தது தனிமையில் இருந்ததுதான். இன்று மணலியில் நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாளை மண்டியில் இருக்கும் பாட்டியைச் சந்திக்கச் செல்கிறேன்”.

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE