நலிவடைந்த மக்களுக்கு இலவச இ-ரிக்‌ஷாக்கள்: நாடு முழுவதும் செயல்படுத்த சோனு சூட் திட்டம்

நாடு முழுவதுமுள்ள நலிவடைந்த மக்களுக்கு இலவச இ-ரிக்‌ஷாக்கள் வழங்கவுள்ளதாக நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாகப் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை ஒரு சூப்பர் ஹீரோவாகப் பாவித்து புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு இ-ரிக்‌ஷாக்களை இலவசமாக வழங்கவுள்ளதாக சோனு சூட் அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக தனது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம், மோகாவில் 100 இ-ரிக்‌ஷாக்களை சோனு சூட் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து சோனு சூட் கூறியுள்ளதாவது:

''உத்தரப் பிரதேசம் தொடங்கி, பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உதவும் வகையில் இலவச இ-ரிக்‌ஷாக்களை வழங்கவுள்ளேன். முதற்கட்டமாக நான் பிறந்த ஊரான மோகாவிலிருந்து இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளேன்.

மக்கள் சுய சார்புடன், தங்கள் சொந்த உழைப்பில் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். கரோனாவுக்குப் பிறகு பெரும்பாலான மக்களுக்குத் தங்கள் வேலை தக்கவைத்துக் கொள்வதே மிகவும் கடினமாகிவிட்டது. எனவே, அவர்களுக்கு உதவ இ-ரிக்‌ஷாக்கள் ஒரு நல்ல வழியாக இருக்கும். அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் யாரும் பணத்தை வீண் செலவு செய்யாமல் இல்லாதவர்களுக்கு ஒரு இ-ரிக்‌ஷாவை வழங்கவேண்டும்''.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE