அனுராக் போலீஸாரிடம் பொய் கூறுகிறார்: பாயல் கோஷ் குற்றச்சாட்டு 

By ஐஏஎன்எஸ்

வெளிநாட்டில் இருந்ததாக அனுராக் காஷ்யப் போலீஸாரிடம் கூறியது பொய் என்று நடிகை பாயல் கோஷ் கூறியுள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக திரைத்துறையினரும் அவரது முன்னாள் மனைவிகளும் குரல் கொடுத்தாலும் பாயல் கோஷ் தனது நிலையில் தீர்மானமாக இருந்து வருகிறார். இதுகுறித்துக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கோரி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைப் பாயல் சந்தித்துப் பேசினார்.

பாயல் கோஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வெர்ஸோவா காவல் நிலையம் அனுராக் காஷ்யப்புக்குச் சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்.1 அன்று அனுராக் காஷ்யப் வெர்ஸோவா காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று போலீஸாரிடம் அனுராக் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களையும் அனுராக் சமர்ப்பித்துள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் ப்ரியங்கா கிமானி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

''சம்பவம் நடந்ததாக பாயல் கோஷ் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கும் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் படப்பிடிப்புக்காக அனுராக் இலங்கையில் இருந்தார். இதற்கான ஆதாரங்கள் போலீஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அனுராக் மீது பாயல் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டுப் புனையப்பட்டுள்ளன. நீதி வெல்லும்''.

இவ்வாறு கிமானி கூறியுள்ளார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப் போலீஸாரிடம் பொய் கூறுவதாக பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''போலீஸாரிடம் தனது வாக்குமூலத்தில் அனுராக் காஷ்யப் பொய் கூறியிருக்கிறார். அவருக்குப் போதைப் பொருள் பரிசோதனை, பொய்யைக் கண்டறியும் கருவி ஆகியவற்றின் மூலம் உண்மையைக் கண்டறிய எனது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கான புகாரை விரைவில் போலீஸாரிடம் அளிக்கவுள்ளோம்''.

இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE