விமர்சனத்திலும் புறம் தள்ளப்பட்ட 'சடக் 2': வாரிசு அரசியல் மட்டுமே காரணமா?

By கார்த்திக் கிருஷ்ணா

மகேஷ் பட் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'சடக் 2' திரைப்படம், விமர்சகர்களாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடி டிஜிட்டல் வெளியீடாக வந்த படம் 'சடக் 2'. ஏகோபித்த எதிர்மறை விமர்சனங்களை இந்தப் படம் பெற்று வருகிறது. இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் கூட இதைப் பற்றிக் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்குப் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. ஆனால் இந்த வெறுப்பு ஜூன் மாதத்திலிருந்துதான் வேர் விட்டது என்பது சிலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

மகேஷ் பட் இயக்கி, அவரது இளைய சகோதரர் முகேஷ் பட் தயாரிக்க, மகேஷ் பட்டின் மகள்கள் பூஜா பட், ஆலியா பட் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'சடக் 2'. சஞ்சய் தத், ஆதித்யா ராய் கபூர் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். 1991-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'சடக்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டது 2018-ம் ஆண்டு. கடந்த வருடம் மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்து நடந்தது.

அப்போதெல்லாம் யாரும் இந்தப் படம் பற்றிய எந்தப் பெரிய சிந்தனையுமின்றி இருந்தனர். சிலருக்கு இப்படி ஒரு படம் வருகிறது என்று கூடத் தெரியாது. தெரிந்தவர்களில், முதல் பாகத்தின் ரசிகர்கள் மட்டுமே ஆவலுடன் காத்திருந்தனர். மார்ச் மாதம் இந்தப் படம் வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா நெருக்கடி, ஊரடங்கு காரணமாக வெளியீடு தள்ளிப் போனது. இந்த நேரத்திலும் கூட ஆலியா பட் ரசிகர்கள் மட்டுமே இதற்கு தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்களே தவிர பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தப் புள்ளியில் ஆரம்பித்ததுதான் 'சடக் 2' உள்ளிட்ட பல திரைப்படங்களின் மீதான வெறுப்பு.

பாலிவுட்டில் வாரிசு அரசியல் அதிகம், வாரிசுகளுக்கே வாய்ப்புகளில் முக்கியத்துவம் தரப்படுகிறது, அவர்களுக்கே முன்னுரிமை உள்ளது, பின்புலம் இன்றி துறைக்குள் வரும் திறமையானவர்களின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன, அதையும் மீறி வளரும் புதியவர்களை, வாரிசுகளும், வாரிசுகளை ஆதரிப்பவர்களும் ஓரங்கட்ட நினைக்கின்றனர், இப்படியான அரசியல், அது தந்த மன அழுத்தம் காரணமாகவே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் வெடித்தது.

முக்கியமாக கங்கணா ரணாவத் நேரடியாகவே பல பாலிவுட் பிரபலங்களைக் குறிப்பிட்டு அவர்களே சுஷாந்தின் மரணத்துக்குக் காரணம் என்று குற்றம் சாட்ட ஆரம்பித்தார். முக்கியமாக சுஷாந்தின் காதலியான ரியா, மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன. இன்னொரு பக்கம், ஒரு நிகழ்ச்சியில் சுஷாந்த் சிங் பற்றி அலியா பட் குறைவாக மதிப்பிட்டுப் பேசியதாகப் பழைய காணொலிகளும் உலா வர ஆரம்பித்தன. நெட்டிசன்களின் கோபம் இன்னும் அதிகமானது.

இந்த நிலையில் ஜூன் 29-ம் தேதி அன்று 'சடக் 2', நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது. அன்றைய தினமே, 'சடக் 2' திரைப்படத்தையும், அதை வெளியிடும் ஓடிடி தளத்தையும் புறக்கணிப்போம் என சுஷாந்தின் ரசிகர்கள், வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள், கூட்டத்தில் கல் எறிபவர்கள் என அத்தனை பேரும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், இணையத்தில் வரும் எதிர்ப்புகள் எப்போதுமே குறிப்பிட்ட அந்த நபரையோ, நபர்களையோ பெரிதாகப் பாதிப்பதில்லை. சில நேரங்களில், யாரை எதிர்க்கிறோமோ அவர்களுக்கே சாதகமாகவும் இது மாறியுள்ளது.

அப்படி 'சடக் 2' படத்தை திட்டிக்கொண்டேவாவது பலரும் பார்ப்பார்கள் என்பதே சினிமா ஆர்வலர்கள் சிலரின் கருத்தாக இருந்தது.

இதற்கு நடுவில், நெபோமீட்டர் என்கிற அளவுகோலை சுஷாந்தின் மாமா விஷாலின் சகோதரர் கிருஷ்ணா ட்விட்டரில் அறிமுகம் செய்தார். இதன்படி படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், இயக்குநர், கதாசிரியர் ஆகியவர்களில் யாரெல்லாம் வாரிசுகள், பின்புலம் உடையவர்கள் என்று பார்த்து அதற்கான மதிப்பெண் கொடுக்கப்படும். இதில் சஞ்சய் தத் (நடிகர் சுனில் தத்தின் மகன்), ஆதித்யா ராய் கபூர் (ராய் கபூர் குடும்பம்) உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே வாரிசுகள். பட் குடும்பத்தின் தயாரிப்பு, இயக்கம். இப்படி அத்தனையும் வாரிசுகள் மயமாக இருந்த இந்தப் படத்துக்கு நெபோமீட்டரில் 98 சதவீத மதிப்பெண்கள் கிடைத்தன. இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டாமா, நீங்கள் இதைப் பார்ப்பீர்களா என்கிற ரீதியில் கிருஷ்ணா ட்வீட் செய்திருந்தார்.

இதன்பின் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 12-ம் தேதி யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டது. எதிர்பார்த்தபடியே ட்ரெய்லரைப் பிடிக்கவில்லை என்று டிஸ்லைக் செய்தவர்கள் எண்ணிக்கை படு வேகமாக உயர்ந்தது. ஒரே நாளில் அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லர் என்று சாதனை படைக்கும் அளவில் நெட்டிசன்கள் இதில் வேகம் காட்டினார்கள். ட்ரெய்லரைப் பார்க்காமலேயே டிஸ்லைக் செய்தவர்களும் அதிகம். உலகிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற யூடியூப் வீடியோ என்கிற பட்டியலில் பெருமைக்குரிய இரண்டாவது இடத்தை 'சடக் 2' ட்ரெய்லர் பெற்றது. கிட்டத்தட்ட 1.2 கோடி முறைகளுக்கும் மேல் டிஸ்லைக் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் 7 கோடி பார்வைகளையும் இந்த ட்ரெய்லர் ஈர்த்துள்ளது.

ஆகஸ்ட் 28 அன்று 'சடக் 2' வெளியானது. சமீபத்தில் வேறெந்த திரைப்படத்துக்கும் இவ்வளவு கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு விமர்சகர்களும், ரசிகர்களும் துவைத்துத் தொங்கப் போட்டனர். ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக இருந்த ஆலியாவுக்கு மட்டும் சிலர் இறக்கம் காட்டி, அவரது நடிப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற ரீதியில் எழுதியிருந்தனர். மற்றபடி, தூக்க மாத்திரை சாப்பிடத்தைப் போல தூக்கம் வருகிறது, காலம் கடந்த படைப்பு, இந்தக் காலத்தில் இப்படி ஒரு படமா என புதுப்புது விதங்களில் 'சடக் 2'வை, சதக் சதக் என விமர்சனக் கத்திகளால் குத்திக் கிழித்துள்ளனர்.

இப்படி ஒரு எதிர்ப்புக்கு சுஷாந்தின் மரணமும், வாரிசு அரசியல் எதிர்ப்பு மட்டுமே காரணமா?

இல்லை என்கின்றனர் சினிமாவை சினிமாவாக மட்டுமே ரசிக்கும் ஒரு சிலர். படம் நிஜமாகவே மோசமாக இருப்பதால்தான் இப்படி விமர்சனம் வந்திருக்கிறது. சுஷாந்த் சர்ச்சை இல்லையென்றால் ஒரு வேளை சற்று மிதமாகத் திட்டியிருக்கலாம். ஆனால், எப்படியிருந்தாலும் படம் இப்படியான விமர்சனங்களையே சந்தித்திருக்கும் என்கின்றனர் அவர்கள். அதற்கு அவர்கள் உதாரணமாகக் காட்டுவது 'சடக் 2'-வுக்கு முன் வெளியான குஞ்ஜன் சக்சேனா மற்றும் ஷகுந்தலா தேவி திரைப்படங்களை.

'சடக் 2' எப்படி வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்புகளைச் சந்தித்ததோ, அதே போல குஞ்ஜன் சக்சேனாவும் கூட கடும் எதிர்ப்புகளைச் சம்பாதித்தது. காரணம், ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் வாரிசு, படத்தைத் தயாரித்தது, வாரிசு அரசியலின் பாலிவுட் பிரதிநிதி என்று சொல்லப்படும் கரண் ஜோஹர். இந்தப் படத்தை எதிர்ப்போம், புறக்கணிப்போம் என்று குரல்கள் எழுந்தாலும் கூட, பட வெளியீட்டுக்குப் பின் படத்தைப் பாராட்டியவர்களே அதிகம்.

இதில் கூட இந்திய விமானப் படையைப் பற்றிய சித்தரிப்பு தவறாக உள்ளதாகச் சர்ச்சை எழுந்ததே தவிர அதற்கும் சுஷாந்துக்கும் சம்பந்தம் இல்லை. அதே போல ஷகுந்தலா தேவியின் நாயகி வித்யா பாலன், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்தவர். இந்தப் படத்துக்கு எதிர்ப்பே எழவில்லை.

சமூகத்தின் பிரதிபலிப்பான இணைய சமூகத்திலும் எதை எதிர்ப்பது, எதை எதிர்க்க வேண்டாம், எதற்கு பாராமுகம் காட்டுவது, எதைப் புறக்கணிப்பது என்பதில் எல்லாம் பாரபட்சம் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. நாளைக்கே ஆலியா பட் நடிப்பில் சிறப்பான ஒரு படம் வெளியானால் கண்டிப்பாக மகேஷ் பட்டின் குடும்பத்தில் இப்படி ஒரு திறமையா என்கிற ரீதியில் பாராட்டுவார்களே தவிர ஒதுக்கிவிட மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு நேரத்தில் ஊடகங்களுக்கும் பெரிதாகச் செய்திகள் கிடைக்காத காரணத்தால் இப்போதைக்கு சுஷாந்த் வழக்கைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக சுஷாந்தின் மரணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மம் கண்டுபிடிக்கப் பட வேண்டும், அவருக்கு நீதி வேண்டும், வாரிசு அரசியல் வளரக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் நியாயமானவையே. ஆனால் இது மட்டுமே செய்தி அல்ல என்பதே பலருக்கு மறந்துவிட்டிருக்கிறது.

எனவே வாரிசு அரசியலோ இல்லையோ, வாரிசுகளுக்கு முன்னுரிமையோ இல்லையோ, எல்லாத் துறைகளிலுமே இதேபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. கேளிக்கைக்கான சினிமா மட்டுமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஆனால் இணையத்தில் எவ்வளவு போராடினாலும், குரல் கொடுத்தாலும், ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தாலும், காணொலி போட்டுக் குமுறினாலும், படம் நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், இல்லையேல் இல்லை என்பதையே 'சடக் 2' காட்டுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்