சுஷாந்த் சிங் வழக்கு: தனித்தனி குழுக்கள் அமைத்து சிபிஐ விசாரணை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்த விசாரணையை வெள்ளிக்கிழமை அன்று சிபிஐ அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

மத்திய தடய அறிவியல் பரிசோதனை ஆய்வகக் குழுவுடன் மும்பை வந்திறங்கிய சில மணி நேரங்களில் மும்பை காவல்துறையைச் சந்தித்து, சுஷாந்தின் டைரி, லேப்டாப் மற்றும் மொபை உள்ளிட்ட ஆவணங்களைச் சேகரித்து முக்கிய சாட்சிகள் சிலரையும் சிபிஐ விசாரித்துள்ளது.

சுஷாந்த் மறைந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில்,புதன்கிழமை உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு சிபிஐ தரப்பு விசாரணையை வேகப்படுத்தியுள்ளது. சிபிஐ குழு மும்பையில் 10 நாட்கள் தங்கியிருந்து விசாரிக்கும் என்று தெரிகிறது.

4-5 தனித்தனிக் குழுக்களாக பிரிந்து, குழுவுக்கு ஒரு பணி என பிரிக்கப்பட்டு சரியான திட்டமிடலோடு சிபிஐ இந்த விசாரணையைத் துவக்கியுள்ளது. இதில் ஒரு குழு காவல்துறையோடு ஒருங்கிணைந்து விசாரிக்கும், இன்னொரு குழு சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று பார்த்து விசாரணை மேற்கொள்ளும், மேலும் சாட்சிகள், குறுக்கு விசாரணை உள்ளிட்ட களப் பணிகளை தனித்தனிக் குழுக்கள் கவனிக்கும்.

முன்னதாக, நுபூர் பிராசாத் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு, பாந்த்ரா டிசிபி அலுவலகத்துக்கு வந்து இந்த விசாரணையை நடத்தி வந்த மும்பை காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தது. தற்போதைய விசாரணை நிலை குறித்த விரிவான தகவலை மும்பை காவல்துறை சிபிஐயிடம் கூறியதாகத் தெரிகிறது.

இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் சுஷாந்தின் பாந்த்ரா வீட்டில், அவர் எப்படி இறந்தார் என்பது காட்சி போல அரங்கேற்றப்பட்டு விசாரிக்கப்படும். அவர் இறந்ததும் அந்த இடத்துக்கு வந்த முதல் 5 நபர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவரிடமும் சிபிஐ விசாரிக்கும். தேவைப்பட்டால், பிப்ரவரி மாதம் சுஷாந்தின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சுஷாந்தின் குடும்பத்தினர் எந்த காவல்துறை அதிகாரியிடம் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினார்களோ அவரிடமும் விசாரணை செய்யப்படும்.

மேலும் சுஷாந்தின் மொபைல் அழைப்புகள், அவரது காதலி ரியாவியின் மொபைல் அழைப்புகள் உள்ளிட்டவை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். சிபிஐ மற்றும் தடயவியல் குழுவுக்கு, கட்டாய தனிமைப்படுத்தல் விதியிலிருந்து மும்பை மாநகராட்சி விலக்கு அளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று, சுஷாந்த் வீட்டுச் சமையல்காரர் நீரஜ் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் ஸவந்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரியா உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ வரும் நாட்களில் விசாரணை செய்யும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE