தானமளிக்கச் சொன்ன பெண்: பட்டியலுடன் பதிலடிக் கொடுத்த அமிதாப் பச்சன்

By செய்திப்பிரிவு

நடிகர் அமிதாப் பச்சன் தன்னை தானமளிக்கச் சொல்லி அறிவுரை தந்த பெண்ணுக்கு விரிவாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அமிதாப் பச்சன், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினார். எப்போதும் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அமிதாப், தான் வீடு திரும்பியது குறித்தும் பகிர்ந்து, தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அமிதாப்பின் பதிவில் பதில் கருத்து எழுதியிருந்த பெண் ஒருவர், "உங்களிடம் இருக்கும் கூடுதல் செல்வத்தை நீங்கள் ஏன் தேவைப்படுபவர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாகத் தரக் கூடாது? கண்டிப்பாக உங்கள் பணப்பையில் நிறைய அன்பும் ஆசீர்வாதங்களும் நிறையும் என்று எனக்குக் கண்டிப்பாகத் தெரியும். உதாரணமாக முன் நின்று வழி நடத்துங்கள். அறிவுறுத்தல் நல்லதுதான் ஆனால் உதாரணமாக இருப்பதில் இன்னும் மதிப்புடையது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கேள்விக்கு அதன் கீழேயே அமிதாப் பச்சன் விரிவாகப் பதிலளித்துள்ளார்.

"ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் மட்டுமல்ல, ஆந்திரா, விதர்பா, பிஹார் மற்றும் உ.பியில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை நான் எனது நிதி உதவி மூலம் தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன்.

நீங்கள் தவறான தகவல்களுடன் பாதுகாப்பாக இங்கே ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட, ஜம்மு காஷ்மீர் மற்றும் புல்வாமாவில் நம்மைப் பாதுகாக்கும், உயிர்த் தியாகம் செய்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவியிருக்கிறேன்.

எனது துறையில் இருக்கும் பணியாளர்களில் 1 லட்சம் குடும்பங்களுக்கு, 6 மாதங்களுக்குத் தேவையான மளிகை மற்றும் உணவுப் பொருட்களைத் தந்திருக்கிறேன். மும்பையில், ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை, தினமும் 5000 பேருக்கு மதிய உணவும், இரவு உணவும் தந்து வருகிறேன்.

மும்பையிலிருந்து நடந்தே தங்களது கிராமங்களுக்குச் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 12,000 காலணிகள் தந்திருக்கிறேன். நாஸிக் நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருப்பவர்களைப் பிடித்து உணவும், நீரும் அளித்து, பிஹார் மற்றும் உ.பியில் இருக்கும் அவர்கள் வீடுகளுக்குத் திரும்ப 10 பேருந்துகளை ஏற்பாடும் செய்திருக்கிறேன்.

2009 புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப ஒரு முழு ரயிலை ஏற்பாடு செய்தேன். அரசியலால் அது ரத்தானபோது, அடுத்த ஒரு மணி நேரத்தில், இண்டிகோவில் 6 தனி விமானங்களை ஏற்பாடு செய்தேன். ஒவ்வொரு விமானத்திலும் 180 பயணிகள். 2 வாரணாசிக்கு, 2 கோரக்பூருக்கு, ஒன்று அலகாபாதுக்கு, ஒன்று பாட்னாவுக்கு எனச் சென்றன. அவர்களுக்கு விமானத்தில் உணவு, விமான நிலையத்திலிருந்து அவரவர் கிராமங்களுக்குச் செல்ல போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன. எல்லாம் என் செலவு மட்டுமே.

களப் பணியாளர்களுக்காக, மும்பையில் இருக்கு மருத்துவ மற்றும் காவல்துறை ஊழியர்களுக்காக 15,000 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 10,000 முகக் கவசங்களை தந்திருக்கிறேன். சிக்கலில் இருக்கும் ஏழைகளுக்கு உணவளித்து உதவும் டெல்லி சீக்கிய சமூகத்துக்குக் கணிசமான நிதியுதவி அளித்திருக்கிறேன்" என்று தான் செய்த உதவிகளைப் பட்டியலிட்டிருக்கும் அமிதாப் பச்சன், மேலும் "இதை எழுதுகையில் நான் கண் கலங்குகிறேன். ஏனென்றால் நான் செய்யும் உதவிகள் குறித்து நான் பேசக் கூடாது, செய்ய மட்டும் தான் வேண்டும் என்ற எனது நம்பிக்கையை, கொள்கையை இந்தப் பெண்மணி உடைத்து விட்டார்.

சீமா படேல் அவர்களே, ஆம் எனது பணப்பையில் அன்பும், ஆசீர்வாதங்களும் நிறைந்துள்ளன. உதாரணமாக முன் நிற்க வேண்டும் என்ற உங்கள் அறிவுரையை நான் ஏற்கவில்லை. நான் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் தருவேன். ஏனென்றால் நீங்கள் ஒரு மாய உலகில் இருக்கிறீர்கள். நான் என்ன செய்திருக்கிறேன். செய்து கொண்டிருக்கிறேன், செய்யவிருக்கிறேன் என்பது பற்றி உங்களுக்கு எந்த அறிவும், தகவலும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE