பயோபிக் படங்கள் உருவாக்கம்: வித்யா பாலன் கருத்து

By செய்திப்பிரிவு

'டர்டி பிக்சர்' படத்துக்குப் பிறகு நிறைய பயோபிக் வாய்ப்புகள் வந்ததாக வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

அனு மேனன் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஷகுந்தலா தேவி'. பிரபல கணித மேதை ஷகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜூலை 31-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் குறித்துப் பேசியுள்ளார் வித்யா பாலன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

" 'டர்டி பிக்சர்' படத்துக்குப் பிறகு எனக்கு எக்கச்சக்கமான பயோபிக் (வாழ்க்கை வரலாறு திரைப்படம்) வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ஆனால் பல சமயங்களில், ஒரு பயோபிக் எடுக்கப்படும்போது, அதற்குச் சம்பந்தப்பட்டவர் குடும்பத்தின் அனுமதி கிடைக்கும்போது, அது அவரது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் கதையாக இருக்காது. மாறாக அவரது புகழ்பாடும், போற்றும் கதையாகவே இருக்கும். அதில் எந்த சுவாரசியமும் இல்லை.

ஷகுந்தலா தேவி பற்றி அனு மேனன் சொன்னபோது, அவரைப் பற்றிய கதைகள், கட்டுரைகளைப் பகிர்ந்த போது, ஷகுந்தலா தேவியின் மகள் அனுபமா பேனர்ஜியிடம் அனு பேசியதைக் கேட்டபோது ஒரு நிஜமான மனிதரை, நம்பகத்தன்மையுள்ள ஒரு மனிதரைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அவர் அதிமேதாவியாக இருந்தாலும் மனிதர்தானே. குறைகள் இருக்கும் ஒருவர்தானே. அதுதான் என்னை ஈர்த்தது. அட, இப்படி ஒரு கதையைச் சொல்ல அனுமதிக்கிறார்கள் என்றால் கண்டிப்பாகச் சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்தேன். கணித மேதையான ஷகுந்தலாவைப் போற்றி மட்டுமே வேண்டுமென்றால் ஒரு ஆவணப்படம் எடுத்துவிடலாம். திரைப்படம் எடுக்கக் கூடாது".

இவ்வாறு வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE