சுஷாந்த் குறித்து நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி கூறியதாக போலிச் செய்தி: நிருபர் கைது 

'பாதாள் லோக்' உள்ளிட்ட பல்வேறு வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் நடித்தவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. இந்த மாதம் வெளியாகவுள்ள ‘தில் பெச்சாரா’ படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சுஷாந்த் மரணத்தைக் குறிப்பிட்டு ‘இப்போதெல்லாம் தற்கொலை என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது’ என்று ஸ்வஸ்திகா கூறியதாக ஒரு தனியார் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. அதைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர். ஸ்வஸ்திகாவின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பலரும் அவரைத் திட்டித் தீர்த்தனர்.

இந்நிலையில் தான் கூறியதாக பொய்ச் செய்தி வெளியிட்ட நிருபர் மற்றும் தன் மீது ஆசிட் வீசப்போவதாக சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்த இளைஞர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளதாக ஸ்வஸ்திகா தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''சுஷாந்த் தற்கொலை குறித்து ‘தற்கொலை என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது’ என்று நான் கூறியதாக கடந்த ஜூன் 26-ம் தேதி அன்று இணைய ஊடகங்களில் பொய்யான ஒரு செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் வார்த்தைகளால் என் மீது கடும் தாக்குல்களைத் தொடுத்து வந்தனர். அதில் சிலர் பாலியல் ரீதியாகவும், கொலை செய்துவிடுவதாகவும் என்னை மிரட்டினார்கள்.

அந்தப் பொய்யான செய்தியைப் பரப்பிய ஷுவம் சக்ரபோர்த்தி என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிருபர் கொலகத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை நான் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். தான் சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே போலிச் செய்தி பரப்பியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அத்துடன் என் மீதி ஆசிட் வீசப் போவதாக மிரட்டல் விடுத்த ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த கவுஷிக் தாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவாக நடவடிக்கை எடுத்த கொல்கத்தா சைபர் க்ரைம் போலீஸாருக்கு நன்றிகள்''.

இவ்வாறு ஸ்வஸ்திகா முகர்ஜி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE