சுஷாந்த் சிங் மரணம்: பாலிவுட் திரையுலகினர் மீது மீரா சோப்ரா காட்டம்

By செய்திப்பிரிவு

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் திரையுலகினரைக் கடுமையாகச் சாடியுள்ளார் நடிகை மீரா சோப்ரா.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் நேற்று (14.06.20) தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'சுதேசி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. இந்நிலையில் சுஷாந்த் சிங் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவுக்கு இந்தியத் திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக, நடிகை மீரா சோப்ரா கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"குரூரமான, இரக்கமற்ற, கருணையில்லாத ஒரு துறையில் நாம் பணியாற்றுகிறோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சுஷாந்த் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்பது நீண்ட நாட்களாக நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் என்ன செய்தோம்? அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்தவர்கள் எங்கே? அவருடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எங்கே? அவரது நெருங்கிய நண்பர்கள் எங்கே? ஏன் யாரும் வந்து அவருக்கு உதவவில்லை? அவருக்குத் தேவையான அன்பைக் காட்டவில்லை, பணி வாய்ப்பைத் தரவில்லை? ஏனென்றால் யாருக்கும் கவலையில்லை.

இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். ஆனால், நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. உங்களின் ஒரு படம் தோல்வியடைந்தால் உங்களைத் தீண்டத்தகாதவர் போல நடத்த ஆரம்பிப்பார்கள். உண்மை, பாலிவுட் ஒரு சிறிய குடும்பம்தான். ஆனால், உங்களுக்குத் தேவை இருக்கும்போதும் கவனிக்காத ஒரு குடும்பம்.

அதுபோன்ற ஒரு குடும்பம் தான் அனுபவித்த வலியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். பாலிவுட்டுக்கு வெளியிலிருந்து வரும் ஒரு ஆள் எப்போதுமே தான் இந்த இடத்தைச் சேர்ந்தவன் அல்ல என்றே உணர்வான்.

ஒருவருக்கு எப்போது தேவையோ அப்போது உதவுங்கள். அவர்களுக்கு அது எப்போது தேவை என்பதும் உங்களுக்குத் தெரியும். அவர்கள் இறந்தபின் ட்வீட் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. அவர் சோகமாக இருக்கும்போது எதுவும் செய்யாத நீங்கள் இப்போது சோகமாக இருப்பது போல நடிக்காதீர்கள். இப்படி ஒரு பாசாங்கான சமூகமாக இருக்காதீர்கள்.

சுஷாந்த், உன் மரணம் ஒரு தனிப்பட்ட இழப்பு. நான் எனது துறையைப் பார்க்கும் விதம் இனி நிரந்தரமாக மாறிவிட்டது. நாங்கள் உங்களை ஏமாற்றிவிட்டோம், துறை ஏமாற்றிவிட்டது. நீங்கள் இன்னும் சிறப்பான இடத்துக்கு உகந்தவர்.

என்னை மன்னித்துவிடுங்கள்".

இவ்வாறு மீரா சோப்ரா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்