ஐநாக்ஸ் திரையரங்க குழுமத்தின் அதிருப்தி அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தங்களது தரப்புக் காரணங்களை விளக்கி இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் கூட்டமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.
அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் 'பிங்க்' இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குலாபோ சிதாபோ' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சேவையில் ஜூன் 12-ம் தேதி அன்று நேரடியாக வெளியாகிறது. இதைப் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநாக்ஸ் திரையரங்க குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் "வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கவேண்டிய தயாரிப்பாளர்கள், ஆபத்தில் உதவாத நண்பர்களாக மாறுகிறார்கள். இதுபோன்ற நண்பர்களால் ஐநாக்ஸ் நிறுவனம் தன்னுடைய தேர்வுகளை ஆராய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது" என்று தங்களுடைய கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.
ஐநாக்ஸ் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
» சந்தோஷ் நாராயணன் பிறந்த நாள் ஸ்பெஷல்: தனித்துவம் வாய்ந்த இசையமைப்பாளர்
» என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ: ஜி.வி.பிரகாஷ் உருக்கம்
அதில் கூறியிருப்பதாவது:
"இதுவரை நாம் சந்தித்திராத ஒரு சூழலில், நம் வாழ்நாளின் மிகப்பெரிய ஆரோக்கிய, பொருளாதார அவசர நிலையில் நாம் இருக்கிறோம். நமது திரைத்துறையில் இக்கட்டான சூழலில் இருக்கும் ஒவ்வொரு அங்கத்தினருக்குமே நாம் அனைவரும் பச்சாதாபத்துடன் ஒன்றுசேர்ந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தினக்கூலிப் பணியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மேலும் திரைத்துறையை நம்பியே வாழும் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர்.
இதுபோன்ற ஒரு சமயத்தில், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்து கடுமையான, ஆக்கபூர்வமற்ற அறிக்கையைப் பார்ப்பது வருத்தம் தருகிறது. குறிப்பாக திரையரங்குகள் மூடப்பட்டு எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், தங்களது படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட முடிவெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்பதைப் பார்க்கும்போது, அது நமது துறையை முன்னெடுத்துச் செல்லத் தோதான விஷயமாகத் தெரியவில்லை.
திரையரங்க உரிமையாளர்கள் போலவே தயாரிப்பாளர் தரப்பும் கோடிக்கணக்கான ரூபாயை தினம் தினம் இழந்து வருகிறது.
* படப்பிடிப்பில் இருக்கும் படங்களுக்காகப் போடப்பட்டிருந்த பிரம்மாண்டமான விலையுயர்ந்த அரங்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவு, ஸ்டுடியோ வாடகை, படப்பிடிப்பு ரத்தானதற்கான செலவு என அத்தனையும் தயாரிப்பாளர் தலையில்தான். காப்பீட்டாளர்கள் இதற்காகக் காப்பீடு செய்ய மறுத்துவிட்டனர்.
* வாங்கிய கடன்களுக்கு ஏறி வரும் வட்டி. திரையரங்குகள் எப்போது திறக்கும் என்று தெரியாத நிலையில், அப்படியே பொது மக்கள் கூடும் இடங்கள் செயல்பட ஆரம்பித்தாலும், அதில் கடைசியாகத்தான் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தெரிந்தும் கூட கூடுதலாக (வட்டி) செலவு செய்து வருகின்றனர்.
* திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அது நம் நாட்டில் சீராக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்தின் நிலைக்கு ஏற்றவாறு அவர்கள் முடிவெடுத்துத் திறக்கலாம் எனும்போது, தேசம் முழுவதும் இருக்கும் திரையரங்குகள் திறக்கப்படும் வரை தயாரிப்பாளர்கள் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தி சினிமாவின் பொருளாதாரம் அப்படி. எல்லா திரையரங்குகளும் திறக்க இன்னும் கொஞ்சம் காலமாகும்.
* அப்படியே இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வெளிநாட்டில் என்ன நிலவரம் என்று தெரியாது. (இந்தி சினிமாவின் முக்கியமான வசூல் சந்தை வெளிநாடுகள்). அங்கும் சில நாடுகளில் திறந்தால், சில நாடுகளில் திறக்கப்படாது. இதனால் தயாரிப்பாளர்களுக்குக் கூடுதல் நஷ்டம்.
* திரையரங்குகள் திறக்கப்பட்டால் குறைவான மக்கள் கூட்டத்துக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது பொதுமக்களின் பாதுகாப்புக்காக சமூக விலகல் சட்டங்கள் கட்டாயமாக அமலில் இருக்கும். மேலும் பொது இடங்களில் மீண்டும் கூடுவது குறித்த அச்சம் மக்களுக்கு இருக்கும்.
* இவற்றோடு, ஏற்கெனவே வெளியாக வேண்டிய திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கும். குறைவான காட்சிகள் திரையிடப்பட்டு சிறிய, நடுத்தர பட்ஜெட் படங்கள் அதிகம் பாதிக்கப்படும்.
இவ்வளவு காரணங்கள் இருக்கும்போது, திரையரங்க வசூலைப் பற்றிய கணிப்பே கட்டுப்படியாகாத நிலையில் ஏற்கெனவே தங்களது படங்களில் அதிகம் முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெறவும், வியாபாரத்தில் நீடித்து இருக்கவும் தேவையான வழிகளைத் தேடுவது இயற்கையே.
இதுபோன்ற சூழலில், சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் மற்றவரின் பிரச்சினை என்ன என்பது குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் எதிர்க்க ஆரம்பித்தால் அது ஒட்டுமொத்தத் துறையையுமே பாதிக்கும்.
சந்தேகத்துக்கு இடமின்றி, மிகத் தீவிரமாகத் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதைத் தயாரிப்பாளர் கூட்டமைப்பு ஆதரிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். திரையரங்க அனுபவத்துக்காக உருவாக்கப்பட்ட படங்களை அங்கு திரையிடுவதுதான் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் இதுபோன்ற எதிர்பாராத சூழலில், மேலே பட்டியலிட்ட காரணங்களுக்காக, இந்தச் சூழலுக்கு ஏற்றவாறு விஷயங்களைப் புரிந்துகொள்வது கட்டாயமாகிறது. நமது திரையரங்கத்தின் திரைகளை உயிர்ப்புடன் ஒளிரவிட நமது தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். அதற்கு அவர்கள் முதலில் வியாபாரத்தில் நிலைக்க வேண்டும்.
திரையரங்குகள் மீண்டும் நமது நாட்டில் திறக்கப்படும்போது, ரசிகர்களை அதிக எண்ணிக்கையில் அரங்குக்குக் கொண்டுவரத் தேவையான அத்தனை முயற்சிகளையும் செய்து, திரைப்படங்களை எங்கு அனுபவித்து ரசிக்க வேண்டுமோ அங்கு அனுபவித்து ரசிக்க வைக்கத் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்".
இவ்வாறு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago