‘ஐ ஃபார் இந்தியா’ ஆன்லைன் இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த ரூ.52 கோடி நிவாரண நிதி

By ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதன் வீரியத்தைக் குறைக்க மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், காவல்துறை ஆகியோர் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற ‘ஐ ஃபார் இந்தியா’ என்ற ஆன்லைன் இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.05.20) அன்று நேரலையில் நடத்தப்பட்டது.

4 மணிநேரம் நடந்த இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான், ஆமிர் கான், ஷாரூக் கான், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஹ்ரித்திக் ரோஷன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் வில் ஸ்மித், ப்ரையன் ஆடம்ஸ், ரஸ்ஸல் பீட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரபலங்களும் கலந்துகொண்டனர். பிரபலங்கள் அனைவரும் அவரவர் வீட்டிலிருந்தே பங்கேற்ற இந்த நிகழ்வை நேரலையில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வின் மூலம் கிடைக்கும் தொகை கரோனா போராளிகளுக்காக வழங்கப்படும் என்று ஏற்கெனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ‘ஐ ஃபார் இந்தியா’ ஆன்லைன் இசை நிகழ்ச்சியின் மூலம் இதுவரை ரூ.52 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளதாகவும், இன்னும் தொடந்து நிதி வந்துகொண்டிருப்பதாகவும் கரண் ஜோஹர், அக்‌ஷய் குமார், கரீனா கபூர் ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

'' ‘ஐ ஃபார் இந்தியா’ ஆன்லைன் இசை நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கும், நன்கொடை வழங்கியவர்களுக்கும், தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இசை நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட ‘ஐ ஃபார் இந்தியா’ தற்போது ஒரு இயக்கமாக மாறியுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பான ஒரு இந்தியாவை உருவாக்குவோம். வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். தொடர்ந்து நிதியுதவி செய்யுங்கள்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE