சகோதரிக்கு ஆதரவாகப் பேசிய விவகாரம்: கங்கணா மீது மும்பை போலீஸில் புகார்

By ஐஏஎன்எஸ்

தன் சகோதரிக்கு ஆதரவாகப் பேசியதாக கங்கணா மீது மும்பை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில், மொரதாபாத்தில் நடந்த கல்லெறி சம்பவத்தைக் குறிப்பிட்டு மத வெறுப்பைத் தூண்டுவது போல கருத்துப் பகிர்ந்ததால், கங்கணாவின் சகோதரியும், அவரது செய்தித் தொடர்பாளருமான ரங்கோலி சாண்டெலின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

தனது சகோதரிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் கங்கணா.

இந்நிலையில் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பதிவிட்ட தன் சகோதரிக்கு ஆதரவாகப் பேசியதாக கங்கணா மீது மும்பை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த அலி காசிஃப் கான் தேஷ்முக் என்ற வழக்கறிஞர் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார்.

கங்கணா மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

''இனப் படுகொலை குறித்து சர்ச்சையாகப் பதிவிட்டுள்ள தன் சகோதரிக்கு ஆதரவாகப் பேசியதோடு மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தீவிரவாதிகள் என்றும் கங்கணா குறிப்பிட்டுள்ளார். கங்கணா மற்றும் அவரது சகோதரி இருவரும் தங்கள் பிரபலம், புகழ், ரசிகர்கள், பணம் அனைத்தையும் வெறுப்பைத் தூண்டி, நாட்டில் பிளவை ஏற்படுத்துவதற்காகவும், தங்கள் சொந்த ஆதாயங்களுக்காகவும் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்''.

இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE