காய்ச்சலால் விழாவில் பங்கேற்காத அமிதாப் பச்சனுக்கு 29-ம் தேதி பால்கே விருது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் ஜவடேகர் தகவல்

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. வழக்கமாக தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவார். இந்த முறை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும், தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (77) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் காய்ச்சலால் அவதிப்படுவதால், தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்க இயலவில்லை, அதற்காக வருந்துகிறேன் என்று ட்விட்டரில் நேற்றுமுன்தினம் பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உடல்நலக் குறைவு காரணமாக தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமிதாப் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் விருது பெற்ற கலைஞர்களுக்கு வரும் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்தளிக்கிறார். அப்போது, அமிதாப் பச்சனுக்கு இந்திய திரைப்படத் துறையின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.

இந்திய திரைப்படத் துறையின் தந்தை என்று போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் கடந்த 1969-ம் ஆண்டு விருது உருவாக்கப்பட்டது. திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனை புரியும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விருதில் தங்கத் தாமரை பதக்கம், சால்வை, ரூ.10 லட்சம் அடங்கும்.- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE