பன்றிக்காய்ச்சலால் ஆமீர்கான் பாதிப்பு

By செய்திப்பிரிவு

 

நடிகர் ஆமிர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் இருவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

'சத்யமேவ ஜெயதே தண்ணீர் குவளை' என்னும் நிகழ்வின் காணொலிக் காட்சியில் இந்தத் தகவலை அவர்கள் தெரிவித்தனர்.

சத்யமேவ ஜெயதே தண்ணீர் குவளை நிகழ்ச்சி என்பது தண்ணீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த கிராமங்களுக்கு இடையேயான விழிப்புணர்வுப் போட்டியாகும். இது ஆமிர்கான் மற்றும் அவரின் மனைவி நடத்தும் பானி ஃபவுண்டேஷன் என்னும் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய ஆமிர்கான், ''இந்த நாள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். ஆனால் ஒரு வருட முயற்சிக்குப் பிறகு, எங்களால் இந்த நாளை உங்களுடன் கொண்டாட முடியவில்லை. அதனால் எங்களுக்கு வருத்தமே.

நாங்கள் ஹெச்1என்1 வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளோம். இது பொதுவாக பன்றிக்காய்ச்சல் என்றே அழைக்கப்படுகிறது. இது எளிதில் பரவும் என்பதால் வீட்டில் ஒரு வாரத்துக்குத் தனியாக இருக்கிறோம்'' என்றார்.

இதுவரை மகாராஷ்டிராவில் 3,500 மக்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 366 பேர் பலியாகி உள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 103 பேர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE