மலாலா வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடரும்

மலாலா யூசுப் சாயின் வாழ்க்கையைச் சொல்லும் குல் மகாய் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடரும் என தயாரிப்பாளர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆளுமையாக இருந்து வருகிறார். அவரது வாழ்க்கையைச் சொல்லும் படம் தற்போது பாலிவுட்டில் தயாராகிவருகிறது.

ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு மும்பை மற்றும் பூஜ் பகுதிகளில் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்ததுவிட்டது. காஷ்மீரில் நிலவும் பதட்டமான சூழலால் அங்கு நடக்கவிருந்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் ஆனந்த் குமார், "50 சதவித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் வெள்ளித்திரைக்கு படத்தை கொண்டு வர ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கெனவே போர் காட்சிகளையும், மற்ற முக்கிய காட்சிகளையும் படமாக்கிவிட்டோம். தற்போது எங்கள் மலாலாவுடன் காஷ்மீரில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது " என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடக்கும் பொது நிகழ்ச்சியில், மலாலாவாக நடிக்கும் நடிகையை அறிமுகப்படுத்த குழு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானில், பெண் கல்விக்காக குரல் கொடுக்கும்போது மலாலாவுக்கு நேர்ந்த அனுபவங்களைப் படம் பேசவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE