லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா வெற்றி, சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: ஏக்தா கபூர்

பிரகாஷ் ஜா தயாரிப்பில் உருவான 'லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா' படத்தின் வெற்றி, சினிமாவுக்கான வெற்றி என அந்தப் படத்தை வழங்கிய ஏக்தா கபூர் தெரிவித்துள்ளார்.

பல சர்ச்சைகளுக்குப் பின் வெளியான 'லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பற்றி பேசியுள்ள ஏக்தா கபூர், "நான் திரைப்பட துறைக்கு சில வருடங்களுக்கு முன்னால் வந்தேன். அதற்கு முன் தொலைக்காட்சித் துறையில் இருந்தேன். படங்கள் எப்படி இருக்கிறது என அனைவரும் சொல்வார்கள் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை.

ஆனால் சிலசமயங்களில் சினிமாக்கள் நன்றாக இருந்தால், அதுவாக ரசிகர்களை சென்று சேரும். அது சினிமாவுக்கான பெரிய வெற்றியாக நினைக்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டு வகை சிக்கல்கள் இருந்தன. ஒன்று சென்சாரால் வந்தது. இன்னொன்று வெளியீட்டில் இருந்தது.

துறையில் இருப்பவர்கள், படம் முதல் நாளில் ரூ.20 லட்சம் வசூலித்தாலே பெரிய விஷயம் என்றார்கள். திரையரங்கில் தாக்குப்பிடிக்காது என்றார்கள். நான் மோசமாக உணர்ந்தேன் ஏனென்றால் இந்தப் படம் சரியாகப் போகாத நிலையில் இது போன்ற படங்கள் எடுக்கப்படமாட்டாது. மக்களும் இது போன்ற படங்கள் பற்றி நினைக்க மாட்டார்கள்" என்றார்.

இந்தப் படத்துக்கு ஏன் ஆதரவளித்தீர்கள் என்று கேட்டபோது, "நான் தயாரிப்பாளராக அதை முடிவெடுக்கவில்லை. அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்ததால் அப்படி முடிவெடுத்தேன். இது ஒரு அற்புதமான படம் என்பதால் இதை வெளியிடுவது எனக்கு முக்கியமாகப் பட்டது. முதல்முறையாக பெண்ணின் பார்வையில் கதை சொல்லும் படமாக இருந்தது. ஒரு பெண்ணாக இந்தப் படத்தை நான் வெளியிட்டிருக்காவிட்டால் நான் என்னயே வெறுத்திருப்பேன்" என ஏக்தாகபூர் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE