நாயக், ரவுடி ரத்தோர் படத்தின் 2-ம் பாகங்களை எழுதும் விஜயேந்திர பிரசாத்

'நாயக்' மற்றும் 'ரவுடி ரத்தோர்' படத்தின் 2-ம் பாகங்களுக்கான கதையை எழுதி வருகிறார் விஜயேந்திர பிரசாத்.

அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'முதல்வன்'. தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்தியில் அனில் கபூர் நடிக்க 'நாயக்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. படம் தோல்வியடைந்தாலும், தொலைக்காட்சி திரையிடல் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது 'நாயக் 2' படத்துக்கான கதையை எழுதி வருகிறார் 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். இதில் யார் நடிக்கவுள்ளார்கள், இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

மேலும், ராஜமெளலி இயக்கத்தில் ரவிதேஜா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரமாக்குடு'. தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழில் கார்த்தி நடிக்க 'சிறுத்தை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியில் பிரபுதேவா இயக்க அக்‌ஷய்குமார் நடிக்க 'ரவுடி ரத்தோர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலுமே பெரும் வரவேற்பு பெற்றது.

தற்போது 'ரவுடி ரத்தோர் 2' படத்துக்கான கதையை எழுதி வருகிறார் விஜயேந்திர பிரசாத். இதில் யார் நடிக்கவுள்ளார்கள், யார் இயக்குநர் உள்ளிட்ட எதுவுமே முடிவாகவில்லை.

'நாயக்' மற்றும் 'ரவுடி ரத்தோர்' படத்தின் 2-ம் பாகங்கள் கதைகளங்கள் குறித்து விஜயேந்திர பிரசாத், "அனில் கபூர் நடித்த நாயக் (தமிழில் முதல்வன்) மற்றும் ரவுடி ராத்தோர் (தமிழில் சிறுத்தை) ஆகிய படங்களின் 2-ம் பாகங்களை எழுதி வருகிறேன். இது ஆரம்பக்கட்டம் என்பதால் கதை பற்றியும், நடிகர்கள் பற்றியும் இப்போது பேச இயலாது. நான் எழுதும் முதல் தொடர்ச்சிக் கதைகள் இவை என்பதால் நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

ஏற்கனவே புகழ்பெற்ற ஒரு கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது சுலபமல்ல. நல்ல கதை அம்சமும் அதே நேரத்தில் பொழுதுபோக்காகவும் இருக்கும் ஒரு யோசனை வருவது கடினமே" என்று தெரிவித்துள்ளார் விஜயேந்திர பிரசாத்.

இரண்டுமே தமிழில் பெரும் வெற்றியடைந்த படங்கள் என்பதால் தமிழில் ரீமேக் செய்யப்படுமா அல்லது தமிழிலும் படமாக்கவுள்ளார்களா என்பது குறித்த எந்தவொரு தகவலையும் விஜயேந்திர பிரசாத் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE