பாலிவுட்டில் கிரிஷ் தீபாவளி

By இரா.கார்த்திகேயன்

“இந்த முயற்சி மட்டும் வெற்றியடைந்துவிட்டால் அது இந்த உலகத்துக்கும் மனிதநேயத்துக்கும் நல்ல தொடக்கமாக இருக்கும்” - ‘கிரிஷ் - 3' படத்தின் டிரெய்லரில் வயதான ஹிருத்திக் பேசும் வசனம் இது. உண்மையிலே இந்தப் படமும் ஹிருத்திக்கிற்கும் அவரது தந்தை ராகேஷிற்கும் பெரிய பரிசோதனை முயற்சிதான்.

தந்தை இயக்க, மகன் நடிக்க தீபாவளிக்கு எதிர்பார்ப்பு வெடிக்கிறது பாலிவுட்டில். தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் முதல் தேதி 4 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது ‘க்ரிஷ் - 3’.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை படையல் விருந்தாக்கி மெனக்கெட்டுள்ளார் நம்மூர் தமிழன் ஒளிப்பதிவாளர் திரு. இந்தப் படத்தின் டிரெய்லர் ரீலிசான இரண்டு வாரங்களிலே மொழி பேதமின்றி கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். பிரியங்காசோப்ரா, கங்கனாரணவத், விவேக் ஓபராய் என பெரிய பட்டாளமே ஆண்டுக்கணக்கில் இந்தப் படத்துக்காக உழைத்துள்ளனர்.

வணிகரீதியாகவும் மிகவும் வலுவாக கால் பதித்துள்ளது ‘க்ரிஷ் - 3’ அணி. கையில் அணியும் ரப்பர் வளையத்திலிருந்து வீடியோ கேம்ஸ் வரை அத்தனையும் தங்கள் படத்திற்கான புரோமாவாக பயன்படுத்திக் கொண்டது மார்க்கெட்டிங் புத்திசாலித்தனம் என வியக்கின்றனர் பாலிவுட்காரர்கள். இதனால் படத்தை பிரமாண்ட வெற்றியடைய வைக்க தந்தைக்கும் மகனுக்கும் பாதி சுமை குறைந்து விட்டது.

ரூ. 250கோடியை முதலீடு செய்து தயாரித்தது மாத்திரம் அல்லாமல் எழுதி இயக்கி ஹிருத்திக்கை நடிக்க வைத்திருக்கும் தந்தைப்பாசத்திற்கு நன்றிக்கடனாக செல்லுமிடமெங்கும் ‘தேங்ஸ் மை டாட்’ என பாசம் பொழிகிறார் மகன் ஹிருத்திக்.

இந்தி, தெலுங்கு, தமிழ் என படம் வரிசை கட்டி பலமாநிலங்களில் வித்தை காட்ட இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் தமிழில் சரியாக போகாத நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக முட்டி மோதுகிறார்கள் தந்தையும் மகனும். “இது சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த படம். பாய்ந்து தாக்குவது, தெறிக்கும் கண்ணாடி சில்லுகள், கண்ணுக்குள் குத்தும் கட்டட கம்பிகள், இடிந்து நொறுங்கும் கட்டத்தோடு நம் மீதும் விழுந்து விடப்போகிறது என நம்மையும் அறியாமல் நிமிர்ந்து பார்க்க வைக்கும் காட்சிப்பதிவுகள் என இப்படம் கலக்கியெடுக்கும்” என்று உறுதி கூறுகிறார்கள் இப்படத்தில் பணிபுரிந்தவர்கள்.

மிகவும் உற்று கவனிக்கும்போது நம்மகந்தசாமி விக்ரம் ஸ்டைலில் ஈர்க்கிறார் ஹிருத்திக். டால்பினாக நழுவி ஜாலம் காட்டுகிறார் பிரியங்கா. எந்திரன் ரஜினி போல பல சாகசங்கள் செய்கிறார் கங்கனா. சில இடங்களில் அனிமேஷன் கலந்த 3டி என்பதால் காட்சிகள் ஒவ்வொன்றும் நெஞ்சுக்குள் புகுந்து பார்வைக்கு வருகின்றன. அந்த வேகம் படம் நெடுக இருக்கவேண்டும். ஹிருத்திக்கை நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பார்க்கும் ரசிகர்களின் விருப்பமும் இதுதான்! அதிலும் கழுகுக்கு முகமூடி போட்டது போல அடர்ந்த முடியோடு தலையை சிலுப்பும் ஹிருத்திக்கின் நியூலுக்கை கண்டு ரசிக்க தினமும் ரசிகைகள் நெட்டில் முண்டியடிப்ப தாக தகவல்.

தமிழ்நாட்டில் அஜித்தின் ஆரம்பம், விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களுடன் தீபாவளி பந்தயத்தில் கிரிஷ்ஷையும் எதிர்பார்க்க லாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE