மும்பை: இந்தியில் அதிக வசூலை ஈட்டிய படங்களில் ‘கடார் 2’, ‘பதான்’, ‘அனிமல்’, ‘பாகுபலி 2’, ஆகிய படங்களின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது ‘ஸ்ட்ரீ 2’ பாலிவுட் திரைப்படம்.
அமர் கவுசிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பேனர்ஜி உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘ஸ்ட்ரீ 2’. ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வர்த்தக நிபுணர்கள் பலரும் இது வசூல் சாதனை படைக்கும் என்று கணித்திருந்தார்கள். ஆனால், யாருமே எதிர்பாராத வண்ணம் இப்போது வரை பல்வேறு திரையரங்குகள் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.527 கோடியை வசூலித்துள்ளது. ‘பாகுபலி 2’ (ரூ.511 கோடி), ‘அனிமல்’ (ரூ.503 கோடி) ‘பதான்’ (ரூ.524.69 கோடி), ‘கடார் 2’ (ரூ.525.52 கோடி) ஆகிய படங்களின் வசூலை கடந்து இந்தியில் சாதனை படைத்துள்ளது. தற்போது இந்தியில் அதிக வசூலை ஈட்டிய படங்களில் இந்தப் படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
ஷாருக்கானின் ‘ஜவான்’ ரூ.582.84 கோடியுடன் முதல் இடத்தில் இருக்கிறது. ‘ஜவான்’ படத்தின் வசூலை முறியடிப்பது கடினம் என்றாலும், முன்னணி நடிகர்கள் இல்லாமல் இந்த அளவுக்கான வசூலை இப்படம் ஈட்டியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.527 கோடியை வசூலித்துள்ள இப்படம், உலக அளவில் ரூ.751 கோடியை ஈட்டியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.