‘இந்திரா தான் இந்தியா..!’ - கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ ட்ரெய்லர் எப்படி? 

By செய்திப்பிரிவு

சென்னை: கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ பாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ஜவஹர்லால் நேருவின் மரணத்துக்குப் பிறகு நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி பதவி ஏற்பதிலிருந்து ட்ரெய்லர் தொடங்குகிறது. நேருவிடமிருந்து இந்திரா நாற்காலியை பறித்தார் என்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளன. 1966-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது தொடங்கி, 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர் மற்றும் அவசர நிலை குறித்தும் இந்தப் படம் பேசும் என்பதை காட்சிகள் உணர்த்துகின்றன.

மேலும், வாஜ்பாயை சந்தித்து இந்திரா காந்தி பேசியதும், அவரை பாராட்டியது குறித்தும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கங்கனா ரனாவத். ‘எமர்ஜென்சி என்பது இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம்’ என ட்ரெய்லரில் குறிப்பிடப்படுகிறது. இறுதியில் ‘இந்தியா தான் இந்திரா, இந்திரா தான் இந்தியா’ என்ற வசனத்துடன் ட்ரெய்லர் முடிகிறது. படம் வரும் செப்டம்பர் 6-ம் தேதி திரைக்கு வருகிறது.

எமர்ஜென்சி: ‘தாகத்’, ‘சந்திரமுகி 2’, ‘தேஜஸ்’ என அடுத்தடுத்த படங்களின் தோல்வியில் இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். வெற்றியை எதிர்நோக்கும் அவரின் அடுத்த படைப்பு ‘எமர்ஜென்சி’. இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் கங்கனா. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதமே முடிவடைந்தது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட படம் ஒருவழியாக செப்டம்பர் மாதம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE