KILL - திரை விமர்சனம்: அதீத ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு ஓர் அட்டகாசமான பேக்கேஜ்!

By சல்மான்

பெரிய அளவில் புரொமோஷன்களோ, ஆர்ப்பாட்டங்களோ இல்லாமல் சைலன்டாக ரிலீஸ் ஆகி ஆக்‌ஷன், பரபரப்பான திரைக்கதை என எல்லா திசைகளில் ஸ்கோர் செய்து பேசுபொருள் ஆகியிருக்கிறது நிகில் நாகேஷ் பட் இயக்கியுள்ள ‘கில்’ (Kill) இந்தி திரைப்படம்.

இந்திய ராணுவத்தில் கமாண்டோவாக இருப்பவர் அம்ரித் (லக்‌ஷயா). தனது காதலிக்கு வேறு ஒருவருடன் கட்டாயத்தின் பேரில் நிச்சயதார்த்தம் ஆவதை அறிந்து அவரைப் பார்க்க பாட்னாவிலிருந்து டெல்லிக்கு தனது நண்பருடன் செல்கிறார். ரயிலில் குடும்பத்துடன் செல்லும் தனது காதலி துலிகாவை (டான்யா மணிக்டாலா) சந்திக்க வேறொரு பெட்டியில் ஏறுகிறார். இன்னொரு பக்கம் ரயிலில் ஏறும் கொள்ளையர் கும்பல் ஒன்று அங்கு இருக்கும் பலரை ஈவு இரக்கமின்றி கொலை செய்கிறது. அந்த கும்பலால் நாயகி துலிகாவின் குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. ரயிலில் இருந்த கமாண்டோவான ஹீரோ, கொள்ளையர்களிடம் இருந்து தனது காதலி குடும்பத்தையும் மற்ற பயணிகளையும் காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

மேலே குறிப்பிட்டிருப்பது படத்தின் வெறும் 20 நிமிட கதைதான். இதன் பிறகு வருவதெல்லாம் வெறும் ரத்தம், கொலை, ஆக்‌ஷன், அதிரடி மட்டுமே. கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு எந்தவித விளம்பரங்களும் இல்லாமல் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட பல படங்களில் நிலை என்ன என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்திய சினிமாவின் நிலைமை இப்படியிருக்க, எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் திரைக்கதையை மட்டுமே நம்பி வெளியாகி, ஒரு நல்ல படத்துக்கு தேவை வீண் விளம்பரங்களோ, தேவையற்ற செலவுகளோ, பெரிய ஸ்டார்களோ இல்லை என்பதை மீண்டுமொரு அழுத்தமாக சொல்லி அடித்து ஜெயித்திருக்கிறது ‘கில்’.

படத்தில் ஒரு காட்சி கூட வலிந்து திணிக்கப்பட்டது போலவோ, சலிப்பை ஏற்படுத்தும் வகையிலோ இல்லாததே இப்படத்தின் முதல் வெற்றி. தொடங்கியது முதல் இறுதி வரை அடுத்தடுத்த அதிரடிகளாலும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் நம்மை வாய் பிளக்க வைத்து விடுகிறார் இயக்குநர்.

இதுவரை கொரிய திரைப்படங்கள் போன்ற உலக சினிமாக்களில் மட்டுமே பார்த்து வியந்த அதிரடியான ஆக்‌ஷன், வன்முறை காட்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையிலான காட்சியமைப்புதான் இப்படத்தின் பலம். இந்த அளவுக்கு வன்முறையும், ‘பரபர’ ஆக்‌ஷன் காட்சிகளும் இதற்கு முன் வேறு எந்த இந்திய சினிமாவிலும் வந்திருக்கிறதா என்பதே சந்தேகம்தான். படம் நிச்சயமாக ரத்தத்ததை பார்த்தால் மயக்கம் வருபவர்களுக்கோ, குழந்தைகளுக்கோ, இளகிய மனம் கொண்டவர்களுக்கோ உகந்ததல்ல.

ஆரம்பத்தில் கொள்ளையர்களை கொன்றுவிடக் கூடாது என்று மிக கவனமாக சண்டையிடும் ஹீரோ, ஒரு கட்டத்தில் ஆகும் டிரான்பர்மேஷனும் அந்த இடத்தில் வரும் டைட்டில் கார்டும் ‘கிளாஸ்’ ரகம். ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு என்ன தேவை என்ற அவர்களின் நாடித்துடிப்பை ஒவ்வொரு காட்சியும் வைக்கப்பட்டிருக்கிறது எனலாம். படம் முழுக்கவே ரயிலில்தான் நடக்கிறது என்பதாலும், திரும்ப திரும்ப ஆக்‌ஷன் காட்சிகளே வந்துகொண்டிருப்பதாலும் சற்று பிசகினால் கூட கடுப்பை ஏற்றி விடும் சிக்கலான திரைக்கதையை மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் நிகில் நாகேஷ் பட்.

ஹீரோ லக்‌ஷயாவுக்கு இதுதான் முதல் படம். உடல் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருந்தாலும் முகம் பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தையை போல இருக்கிறது. எமோஷனலான இடங்களில் சற்று தடுமாறினாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் பொறி பறக்க விடுகிறார். நாயகி டான்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கிய வில்லனாக வரும் ராகவ் ஜூயல் நம்மை முடிந்தவரையில் எரிச்சலூட்டும் அளவுக்கு சிறப்பான நடிப்பு. ஆசிஷ் வித்யார்த்தி, ஹீரோவின் நண்பராக வரும் அபிஷேக் சவுகன் என அனைவரும் குறை கூற முடியாத நடிப்பை தந்துள்ளனர்.

லாஜிக்காக யோசித்தால் இந்தப் படமே ஒரு பிரச்சினைதான். தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த காலத்தில் இப்படி சுலபமாக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல் ஒரு ரயிலில் நுழைந்து அதுவும் இவ்வளவு நேரம் கொலை, கொள்ளைகளை செய்ய முடியுமா என்ற கேள்வி எழலாம். ஆனால், இதுபோன்ற எந்த கேள்வியும் எழாமல் நம்மை முழுக்க முழுக்க படத்துக்குள் ஒன்றச் செய்து விடுவதே திரைக்கதையின் ஜாலம்.

கொரியப் படமான ‘ட்ரைன் டூ பூசான்’ படத்தை ஆங்காங்கே ஞாபகப்படுத்தினாலும் இரண்டு படங்களுக்கும் ரயில் என்ற ஒரு விஷயத்தை தவிர எந்த சம்பந்தமும் இல்லை. ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்‌ஷன் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்போர் தவற விடக்கூடாது படம் ‘கில்’. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான இப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் டப்பிங் இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE