“நாட்கள் குறைவாக இருப்பினும்...” - கீமோதெரபியுடன் ஹினா கான் உத்வேக பகிர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: “இந்த நோயுடன் போராடும் அழகான மனிதர்களே, இது உங்கள் வாழ்க்கை, இதை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஒருபோதும் பின்வாங்காதீர்கள். நாட்கள் குறைவாக இருந்தாலும், அதில் மகிழ்ச்சியுடன் வாழ எப்போதும் மறக்காதீர்கள்” என்று நடிகை ஹினா கான் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஹினா கான். பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர், ‘நாகினி’ தொடரில் நடித்ததன் மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இவர், “தனக்கு மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என கடந்த ஜூன் 28-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். மேலும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனக்கு புற்றுநோய் இருப்பதாக அறிவித்த பின் அவர் கலந்து கொள்ளும் முதல் படப்பிடிப்பு இது என்பது கவனிக்கத்தக்கது. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த பின் நான் கலந்து கொள்ளும் முதல் படப்பிடிப்பு இது. மோசமான நாட்களுக்கு ஓய்வு கொடுங்கள். நீங்கள் அதற்கு தகுதியானவர்.

நாட்கள் குறைவாக இருந்தாலும் அதில் மகிழ்ச்சியுடன் வாழ எப்போதும் மறக்காதீர்கள். இந்த நாட்கள் உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதலில் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; வித்தியாசங்களை தழுவிக்கொள்ளுங்கள். பின் அதனை இயல்பாக்கி கொள்ளுங்கள்.

நான் என்னுடைய வேலையை நேசிக்கிறேன். நான் வேலையில் இருக்கும்போது தான் என்னுடைய கனவுகளில் வாழ்கிறேன். அது தான் எனக்கு சிறந்த உத்வேகத்தை கொடுக்கிறது. நான் தொடர்ந்து வேலையை செய்துகொண்டிருக்க ஆசைப்படுகிறேன். பெரும்பாலானவர்கள் தாங்கள் சிகிச்சையில் இருக்கும்போதே தங்களின் வழக்கமான பணிகளை தொடர்கிறார்கள். அதில் நான் எந்த வகையிலும் வேறுபட்டவர் அல்ல. அண்மையில் நான் சிலரை சந்தித்தேன். அவர்கள் என்னுடைய கண்ணோட்டத்தை மாற்றினார்கள்.

நான் சிகிச்சையில் இருக்கிறேன்தான். ஆனால், அதற்காக நான் எப்போதும் மருத்துவமனையிலேயே இருக்க முடியாது. உங்களிடம் வலிமையும் ஆற்றலும் இருந்தால், உங்களுக்கு எது மகிழ்வைத் தருகிறதோ, அதைச் செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த நோயுடன் போராடும் அழகான மனிதர்களே, இது உங்கள் வாழ்க்கை, இதை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஒருபோதும் பின்வாங்காதீர்கள். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். நீங்கள் விரும்புவதை செய்வது தான் உங்களை முழுமையாக குணமாக்கும்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE