சோபிக்காத ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்: அக்‌ஷய் குமார் திரைப்பயணத்தில் தொடரும் சோகம்

By செய்திப்பிரிவு

மும்பை: அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் எதுவும் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றி பெறவில்லை. அந்த வரிசையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ படமும் இணைந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப்படம் இந்தியில் ‘சர்ஃபிரா’ (Sarfira) என்ற பெயரில் ரீமேக் ஆனது.

அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படத்தை இந்தியிலும் சுதா கொங்கராவே இயக்கினார். கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக முதல் நாளில் படம் வெறும் ரூ.2.5 கோடியை மட்டுமே வசூலித்தது.

கடந்த 15 ஆண்டுகளில் அக்‌ஷய்குமாரின் குறைந்தபட்ச ஓப்பனிங் வசூல் இது. விடுமுறை நாட்கள் உட்பட கடந்த 3 நாட்களைச் சேர்த்து மொத்தமாக படம் ரூ.12 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி என கூறப்படுகிறது.

3 ஆண்டுகளாக தொடரும் பின்னடைவு: கடந்த 3 ஆண்டுகளாகவே அக்ஷய்குமார் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. அவரும் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துப் பார்த்தும் வேலைக்காகவில்லை. கடந்த ஆண்டு இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘செல்ஃபி’ படத்தில் நடித்தார். செல்ஃப் எடுக்கவில்லை. இந்த ஆண்டு டைகர் ஷெராஃப்புடன் இணைந்து ‘படே மியான் சோடே மியான்’ நடித்தார். ரூ.300 கோடியில் உருவான இப்படம் ரூ.100 கோடியை மட்டுமே வசூலித்தது.

2021-ல் வெளியான ‘சாம்ராஜ் பிருத்விராஜ்’ தொடங்கி, ‘ரக்‌ஷா பந்தன்’, ‘ராம் சேது’, ‘ஆக்ஷன் ஹீரோ’, ‘செல்ஃபி’, ‘மிஷன் ராணிகஞ்ச்’ ‘படே மியான் சோடே மியான்’, தற்போது ‘சர்ஃபிரா’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்துக்கு மும்பையின் திரையரங்குகளில் வரவேற்பில்லாத காரணத்தால் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE