ரூ.835 கோடி பட்ஜெட், போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு 600 நாட்கள் - பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை மூன்று பாகங்களாக இயக்குகிறார். இதில் ராமராக, ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக யாஷும் நடிக்கின்றனர். அனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார். சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கிய நிலையில் ரவீனா டாண்டன், அருண் கோவில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன. தொடர்ந்து ராமராகவும் சீதையாகவும் நடிக்கும் ரன்பீர் கபூர், சாய்பல்லவி புகைப்படங்களும் படப்பிடிப்பில் இருந்து கசிந்தன.

தற்போது இந்தப் படத்தின் பட்ஜெட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முதல் பாகம் மட்டும் ரூ.835 கோடி செலவில் எடுக்கப்படவுள்ளது. இதில் பல காட்சிகள் கிராபிக்ஸ் இல்லாமல் அசல் காட்சிகளாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மேற்கொள்ள மட்டும் 600 நாட்கள் தேவைப்படுகிறது. இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டு வருவதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் சுமித் கேடல் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் அக்டோபர் 2027ல் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் சுமித் கேடல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE