மெரி கிறிஸ்துமஸ் Review: அந்நியமான மேக்கிங் நடுவே சில சுவாரஸ்ய தருணங்கள்!

By செய்திப்பிரிவு

2018-ல் ஆயுஷ்மான் குர்ரானா, தபு நடிப்பில் வெளியாகி அந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக பாராட்டப்பட்ட படம் ‘அந்தாதூன்’. அப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள ’மெரி கிறுஸ்துமஸ்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம். (இந்த விமர்சனத்தில் படம் குறித்த ஸ்பாய்லர்கள் அலசப்பட்டுள்ளதால் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்க.)

துபாயிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் (அப்போது பம்பாய்) இருக்கும் தனது இறந்து போன அம்மாவின் வீட்டுக்கு வருகிறார் ஆல்பர்ட் (விஜய் சேதுபதி). கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு ஒரு ஹோட்டலுக்கு செல்லும்போது அங்கு மரியாவையும் (கத்ரீனா கைஃப்) அவரது 6 வயது மகளையும் சந்திக்கிறார். அங்கு அவருடன் நட்பாகும் ஆல்பர்ட், மரியாவிடம் தன்னைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். இருவரும் மரியாவின் வீட்டுக்குச் சென்று மது அருந்திவிட்டு நடனம் ஆடுகின்றனர். பின்னர் மீண்டும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது, மரியாவின் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கிறார். இதனைக் கண்டு அதிரும் இருவரும் பிறகு என்ன செய்தனர்? மரியாவின் கணவரை கொன்றது யார்? - இப்படி பல கேள்விகளுக்கான விடைகள் நோக்கிய நகருகிறது ‘மெர்ரி க்றிஸ்துமஸ்’ திரைக்கதை.

1960-ஆம் ஆண்டு ஃப்ரெட்ரிக் டார்ட் எழுதிய ‘எ பேர்ட் இன் எ கேஜ்’ பிரெஞ்சு நாவலைக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீராம் ராகவன். கிட்டத்தட்ட கதாபாத்திரத்தின் பெயர்களும் கூட அதேதான். ‘Noir Thriller' வகையைச் சேர்ந்த இந்த நாவலை திரைப்படமாக மாற்றியதில் மேக்கிங் ரீதியாக வெற்றிபெறும் ஸ்ரீராம் ராகவன். இதனை திரைக்கதை ரீதியாக சுவாரஸ்யமான படைப்பாக பார்வையாளர்களுக்கு தந்தாரா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்ற பதிலையே தரவேண்டியுள்ளது.

படம் இந்தி, தமிழ் இரண்டிலுமே வெளியாகியுள்ளது. ஆனால், தமிழில் படத்தின் வசனங்கள் மிகவும் அந்நியமாக இருக்கிறது. வசனங்கள் இந்தியில் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை தமிழ்ப்படுத்தும்போது தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றபடி மாற்றுவதே சரியாக இருக்கும். ஆனால், ஒரு சில வசனங்களைத் தவிர பெரும்பாலானவை இந்தியிலிருந்து அப்படியே கூகுள் டிரான்ஸ்லேட்டில் போகிற போக்கில் மொழிபெயர்த்தது போல இருக்கிறது. தமிழுக்காக சில காட்சிகளை பிரத்யேகமாக எடுத்தும் கூட ஒரு டப்பிங் படம் பார்க்கும் உணர்வே படம் முழுக்க இருந்தது.

படம் தொடங்கியது முதலே வசனங்கள் மூலமாகவே கதை நகர்ந்தாலும், ஓரளவு சுவாரஸ்யமாகவே சென்றது. குறிப்பாக விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இருவரும் பேசிக் கொள்ளும் வசனங்கள், விஜய் சேதுபதி அவ்வப்போது அடிக்கும் ஒன்லைனர்கள் ஆகியவை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தன. ஆனால் இவை அனைத்துமே இடைவேளை வரைதான். அதற்கு பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் எந்தவித லாஜிக்கோ, சுவாரஸ்யமோ இன்றி தேமேவென்று நகர்கின்றன.

கொலைக்கான காரணமாக சொல்லப்படும் விஷயமும், போலீஸிடமிருந்து தப்பிப்பதற்காக கிளைமாக்ஸுக்கு முன்பு செய்யும் விஷயத்திலும் எந்தவித லாஜிக்கும் இல்லை. சொல்வது அனைத்தையும் போலீஸ் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு கேட்டு விடுவார்களா? க்ரைம் நடந்த இடத்தில் எவிடன்ஸை அழித்துவிடக்கூடாது என்று கவனமாக செயல்படும் போலீஸ், இரவில் ஒரு கான்ஸ்டபிளைக் கூட காவலுக்கு நிறுத்தாமல் செல்வது எல்லாம் அபத்தம். அதேபோல, வீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களையும் ஒரு பேக்கரி அடுப்பில் போட்டு எரிப்பது எல்லாம் சாத்தியமா? அப்படியே எரித்தாலும் மறுநாள் போலீஸார் அதை கண்டுபிடிக்க முடியாதா? இது போன்ற ஏகப்பட்ட கேள்விகள் படம் பார்க்கும்போதே எழுகின்றன. ஆனால், அதற்கான விடைகளை தராமலே படம் முடிந்து போகிறது.

நடிப்பில் விஜய் சேதுபதி பெரிதாக மெனக்கெடவில்லை என்றாலும் தனது அலட்சியமான உடல்மொழியால் குறைகளின்றி இயல்பாக நடித்துள்ளார். முதல் பாதியில் கத்ரீனா உடனான உரையாடலிலும், அவரது வீட்டில் நடனமாடும் காட்சியிலும் ஈர்க்கிறார். நடிப்பு என்ற அளவில் கத்ரீனா கைஃபுக்கு இது முக்கியமான படமாக இருக்கும். இவர்கள் தவிர போலீஸ் போலீஸாக வரும் ராதிகா சரத்குமார், ‘விருமாண்டி’ சண்முகராஜன், கத்ரீனாவின் மகளாக வரும் குழந்தை என அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் பக்கத்து வீட்டுக்காரராக வரும் ராஜேஷ் மட்டும் அநியாயத்துக்கு இயல்பாக நடித்திருக்கிறார்.

கொலையை மறைப்பதற்காக செய்யும் ஒரு காரியத்தை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்? சொல்லப் போனால் ஒட்டுமொத்த படத்தின் திருப்புமுனையே அதுதான். ஆனால், முந்தைய காட்சிகளில் அழுத்தம் இல்லாததால் அந்த ட்விஸ்ட் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முன்பாதியில் இருந்த ஓரளவு சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் குறைந்து போனதால் அரங்கில் பேரமைதி நிலவுகிறது.

தொழில்நுட்ப ரீதியாக படக்குழுவினரின் உழைப்பு நேர்த்தி. பிரித்தம் இசையில் ’அன்பே விடை’ என்று தொடங்கும் பாடல் ரசிக்கும்படி உள்ளது. மற்ற பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில், டேனியல் பி.ஜார்ஜ் மிரட்டியிருக்கிறார். படம் முழுக்க அதன் மூடுக்கு ஏற்ப நம்மை பயணிக்க வைக்கும் மது நீலகண்டனின் ‘இருள்’ படர்ந்த ஒளிப்பதிவு சிறப்பு. பெரும்பாலா காட்சிகள் இரவிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கேற்ப லைட்டிங்கும், மைத்ரி சுர்தியின் கலை இயக்கமும் மனதை லயிக்கச் செய்கின்றன.

ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய இப்படம், அப்பட்டமான லாஜிக் மீறல்களாலும், இரண்டாம் பாதியின் தொய்வான திரைக்கதையாலும் எந்தவித தாக்கத்தையும் தராமல் தடுமாறி நிற்கிறது. முதல் பாதியில் இருந்த குறைந்தபட்ச சுவாரஸ்யத்தையாவது இரண்டாம் பாதியில் குறையாமல் தந்திருந்தால் முழு மனதோடு கொண்டாடப்பட்டிருக்கும் இந்த ‘மெரி கிறிஸ்துமஸ்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE