ராஷ்மிகாவை தொடர்ந்து ஆலியா பட்: ஓயாத ‘டீப்ஃபேக்’ சர்ச்சை

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்ஃப் செய்யப்பட்ட டீப்ஃபேக் வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையான நிலையில், தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட் முகத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான முறையில் வீடியோ, புகைப்படங்களில் ஒரு நபரை தவறாக சித்தரிப்பது அல்லது ஆள்மாறாட்டம் செய்வதாகும். சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனா முகத்தை மார்ஃப் செய்து ஒரு வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து டீப் ஃபேக் போன்ற தொழில்நுட்பங்கள், போலி தகவல்கள் பரவுதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் முகத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ஆபாச அசைவுகளை வெளிப்படுத்தும் ஒரு பெண்ணின் உடலில் ஆலியாவின் முகம் வைக்கப்பட்டுள்ளது. இதே போல அண்மையில் நடிகைகள் கஜோல், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட நடிகைகளின் டீப்ஃபேக் வீடியோக்களும் பரவி வந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE